ஜெ.என்.யூ மாணவர்கள் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கு காரணமாக அவமானங்களை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2016ம் ஆண்டு, பல்கலைக்கழக நிர்வாகத்தின் சட்டதிட்டங்களுக்கு எதிராக மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
அதில் தேசத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பட்டதாக கூறி மாணவர்கள் சங்கத் தலைவர் கன்ஹையா குமார், அவருடைய தோழர் உமர் காலித், மற்றும் பல மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்டதற்காகவும், நிர்வாக சட்டதிட்டங்களை மீறி மாணவர்களை ஒன்று திரட்டி போராடியதிற்காகவும் அம்மாணவர்களுக்கு அபராதம் விதித்தது பல்கலைக்கழக நிர்வாகம்.
வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, மாணவர்கள் மீது தேவையில்லாத நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் என நிர்வாகத்திடம் நீதிமன்றம் ஏற்கனவே கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் அபராதம் விதித்ததோடு மட்டுமன்றி, அவர்களின் எம்.பில் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாங்கவும் மறுத்துவிட்டது பல்கலைக்கழக நிர்வாகம்.
உமர் காலித், ஜார்காண்ட் மாநிலத்தில் இருக்கும் பழங்குடிகள் பற்றி தன்னுடைய ஆராய்ச்சியினை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைக்கான அனுமதிகள் அனைத்தையும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து பெற்றாலும், பல்கலைக்கழக தலைமை தேர்வு கண்காணிப்பாளர் மட்டும் இன்று வரை என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைக்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்திடவில்லை. அவருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகளுக்கும் இதுவரை பதில் கிடைக்கவில்லை.
ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்பித்தல் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளார் கன்ஹையா குமார். இதனை விசாரித்த நீதிபதி சித்தார்த் மிருதுள், திங்களன்று (20.07.2018) அன்று கன்ஹையா குமாரின் ஆராய்ச்சியினை சமர்பிக்க விட வேண்டும் என்று பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட்டார். மேலும், ஆகஸ்ட் 16 வரை உமர் காலித் மீது எந்தவொரு நிர்வாக நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று எச்சரிக்கையும் செய்துள்ளார்.
ஏற்கனவே உமரினால் இந்த வருடம் தன்னுடைய படிப்பை முடிக்க இயலாத வகையில் முடக்கியுள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். இதை நாங்கள் இப்படியே விடுவதாக இல்லை. மேலும் நிர்வாகம் கூறிய அபராதத்தை ஒரு போதும் கட்ட இயலாது என்று அம்மாணவர்கள் கூறியுள்ளனர்.
உமர்காலித் மட்டுமன்றி அஸ்வதி நாயரின் ஜிம்பாவே நாட்டு அரசியல் - பொருளாதார வளர்ச்சி 1980 - 2013 என்ற ஆராய்ச்சிக் கட்டுரையையும் சமர்பிக்கவிடவில்லை பல்கலைக்கழக நிர்வாகம். அஸ்வதிக்கும் சுமார் 20,000 அபராதம் வழங்கக் கோரி நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.