அறிவியல் மற்றும் ஆய்வியலில் வெவ்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்த விஞ்ஞானிகளுக்கு, பிரபல மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் விருது அளித்து கவுரவித்து வருகிறது.
அதன்படி, இந்தாண்டில் 6 விஞ்ஞானிகளுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தங்கப் பதக்கமும், பரிசுத் தொகையாக 100,000 டாலரும் (இந்திய மதிப்பில் 72.68 லட்சம்) விருது வென்றவர்களுக்கு வழங்கப்படும்.
விஞ்ஞான துறையில் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் விஞ்ஞானிகளுக்கும், ஆய்வாளர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுவதாக இன்போசிஸ் நிறுவனர் மற்றும் இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில், ஆறு பிரிவுகளில் 244 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 6 பேர் கொண்ட நடுவர் குழு, இந்த போட்டியாளர்களில் இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்துள்ளது.
விஞ்ஞானிகளுக்கு இது போன்று விருதுகள் அளித்து, அவர்களது செயல்பாடுகளை கொண்டாடும் போது, இளம் தலைமுறையினர் அதனைப் பார்த்து, எதிர்காலத்தில் அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஊக்கம் பெறுவார்கள். இதனால், நாடு முன்னேற்ற பாதையில் பயணிக்கும் என்று இன்போசிஸ் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவகாந்தா பட், கவிதா சிங், ரூப் மல்லிக், நளினி அனந்தராமன், எஸ்.கே.சதீஷ், செந்தில் முல்லைநாதன் ஆகிய ஆறு ஆய்வாளர்களுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
இதில், செந்தில் முல்லைநாதன் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் Computation and Behavioural Science துறையின் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சமூக அறிவியில் பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது.