கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுகளுக்கு ஒரு விலையா என விமர்சனங்கள் எழுந்த நிலையில், சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ) அடார் பூனாவல்லா, தங்கள் நிறுவனத்தின் கோவிட் 19 தடுப்பூசியின் விலையை மாநில அரசுகளுக்கு ஒரு டோஸின் விலை ரூ.400-லிருந்து ரூ.300ஆக குறைப்பதற்கான முடிவை புதன்கிழமை அறிவித்தார்.
சீரம் இந்தியா சார்பில் இந்த நடவடிக்கை ஒரு நற்காரியத்துக்கான கொடை என்று கூறும் அடார் பூனாவல்லா, “இது மாநில அரசுகளின் ஆயிரக்கணக்கான கோடி நிதியை சேமித்து அதிக தடுப்பூசிகளை செலுத்துவதற்கும் எண்ணற்ற உயிர்களை காப்பாற்றுவதற்கும்” என்று கூறினார்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான அடார் பூனாவல்லா, கடந்த வாரம் மாநில அரசுகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.400 விலை என்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்ட் தடுப்பூசி விலை ஒரு டோஸுக்கு ரூ.600 வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் சீரம் இந்தியா நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை கொடூரமானது என்று கடுமையாக விமர்சித்தன. அதே தடுப்பூசியை மத்திய அரசு ஒரு டோஸுக்கு ரூ.150க்கு பெறும்போது மாநில அரசுகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பது நியாயம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி வாதிட்டது. இந்த நடவடிக்கை பாரபட்சமானது. இது ஒரு சில பெரிய தொழிலதிபர்களுக்கு மட்டுமே பயனளிக்கும். பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக சாடியது.
இருப்பினும், இது வேறுபட்ட விலை அல்ல என்று பூனாவல்லா பின்னர் தெளிவுபடுத்தினார். “புதிய ஒப்பந்தங்களுக்கு அனைத்து அரசாங்கங்க விலைகளும் இனிமேல் ரூ.400 ஆக இருக்கும். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் ரூ.150 விலை என்பது மத்திய அரசாங்கத்திற்கு முதல் ஒப்பந்தங்களுக்காக விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
“இந்தச் சூழலில் வைத்துப் பார்த்தால், இது பெரும்பாலான உலகளாவிய தடுப்பூசிகளின் விலையில் பாதி அல்லது மூன்றில் ஒரு பங்கு விலை” என்று அவர் வலியுறுத்தினார்.
இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு, இந்த நிலைமை சாத்தியமில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியது. “கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான இந்திய அரசின் கொள்முதல் விலை ஒரு டோஸுக்கு ரூ.150 ஆக உள்ளது. இந்த டோஸ்ட்கள் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்” என்று சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் சனிக்கிழமை ட்விட்டரில் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.