தென் மாநில ஆளுனர் ஒருவருக்கு எதிராக பதிவாகியிருக்கும் பாலியல் புகார் குறித்த தகவலில் முன்னேற்றம் இல்லை என மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி கூறினார்.
தென் மாநில ஆளுனர் ஒருவர், ஆளுனர் மாளிகையான ராஜ் பவனில் உள்ள பெண் ஊழியர்களை தனது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்துவதாக ஒரு புகார் கிளம்பியிருக்கிறது. மத்திய அரசு இதை சீரியஸாக எடுத்துக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
செக்ஸ் புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் மேற்படி ஆளுனரை உடனடியாக பதவி விலக மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் மேற்படி ஆளுனர் குறித்து எந்த அடையாளத்தையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடவில்லை. மேலும் குறிப்பிட்ட அந்த ஆளுனர் மீதான இந்தப் புகார் அவரது இந்தப் பதவி காலத்திலா, முந்தைய பதவி காலத்திலா? என உறுதி செய்ய மத்திய அமைச்சகம் முயற்சித்து வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அசோக் பிரசாத் இது குறித்து திங்கள் கிழமை கூறுகையில், ‘இது தொடர்பான மேலதிக தகவல் எதுவும் எங்களுக்கு தெரியாது’ என்றார்.
இந்தியாவில் ஆளுனருக்கு எதிராக பாலியல் புகார் கிளம்புவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஜனவரியில் மேகாலயா ஆளுனராக இருந்த தமிழகத்தை சேர்ந்தவரான வி.சண்முகநாதனுக்கு எதிராக இதே போன்ற புகார் எழுந்தது. ராஜ் பவனில் அவருக்கான பணிகளை மேற்கொள்ள பெண் ஊழியர்களை மட்டுமே தேர்வு செய்வதாகவும், தனிச் செயலாளராக இருந்த ஆண் அதிகாரியை இடமாற்றம் செய்ததாகவும் புகார் கூறப்பட்டது.
மேகாலயா ஆளுனர் மாளிகை ஊழியர்கள் அது தொடர்பாக அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதினர். அதையடுத்து சண்முகநாதன் உடனடியாக ஆளுனர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.