மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2 நாள் பயணமாக கடந்த செப்டம்பர் 4 மற்றும் 5ஆம் தேதியில் மும்பை சென்றார். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றப்பின், அமித்ஷா முதல் முறையாக மும்பை சென்றார். அங்கு அமித்ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சந்தேகத்திற்கிடமான நபர் சுற்றித்திரிந்தார். அமித்ஷாவின் பாதுகாப்பு குழு உறுப்பினர் அடையாள அட்டையை அணிந்தபடி சுற்றித்திரிந்தார்.
அவரது நடமாட்டத்தில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட செயலாளர் ஹேமந்த் பவார்(32) என தெரியவந்தது. அமித்ஷாவின் பாதுகாப்பு குழு பட்டியலில் அவரது பெயர் இல்லை எனவும் தெரிந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் மார்ச் மாதம் நடந்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்தின் பதவிப் பிரமாண நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டது தெரியவந்தது.
கோவாவில் நடைபெற்ற முதல்வர் பிரமோத் சாவந்த்தின் பதவிப் பிரமாண விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக முதல்வர்கள் உள்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியிலும் பாதுகாப்பு குழு உறுப்பினர் போல் அவர் கலந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணை அதிகாரிகள் கூறுகையில், “ஹேமந்த் பவார் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது செல்போனை ஆய்வு செய்ததில் அமித்ஷாவின் 2 நாள் மும்பை பயணம் குறித்த முழு தகவல்கள் அதில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கேட்டபோது, கட்சி பிரதிநிதி ஒருவர் கொடுத்ததாக கூறினார். பவார் 4 மற்றும் 5 தேதிகளில் பல வாட்ஸ்அப் தகவல்களை டெலிட் செய்துள்ளார். இது அமித்ஷா மும்பை பயணத்தின் போது நடந்துள்ளது.
அமித்ஷா நிகழ்வில், பவார் வெள்ளைச் சட்டையும், நீல நிற பிளேஸரும் அணிந்திருந்தார். அவரது கழுத்தில் உள்துறை அமைச்சகத்தின் அடையாள அட்டை அணிந்திருந்தார். கோவாவில் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியிலும் அவர் இருந்துள்ளார். இருப்பினும் அவர் பிரதமரை நெருங்கவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் எவ்வாறு நிகழ்ச்சியில் பங்கேற்றார் என விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
அமித்ஷாவின் மும்பை நிகழ்ச்சியின் போலீஸ் பந்தோபஸ்த்தை மேற்பார்வையிட்ட
உதவி கமிஷனர் நில்காந்த் பாட்டீல் கூறுகையில், ஏக்நாத் ஷிண்டேவின் பங்களாவான வர்ஷாவுக்கு வெளியேவும், துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் பங்களாவான சாகர் அருகிலும் பவாரைக் கண்டதாக கூறினார். அவரை அழைத்து விசாரித்தபோது, மத்திய அரசு அதிகாரி எனக் கூறினார்” என்றார்.
பின், மும்பையின் கிராண்ட் ரோட்டில் உள்ள நானா சவுக்கில் வைத்து காவல்துறையினர் ஹேமந்த் பவாரை கைது செய்தனர். சட்டப் பிரிவு 170, 171-யின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஹேமந்த் பவார் உறவினர் ஒருவர் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், பவார் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை துலேக்கு வருவார். ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் டெல்லி செல்வார் என்றார்.
இவை அனைத்திலும், ஒரு கேள்விக்கு மட்டும் தெளிவான பதில் இல்லை. பவார் ஏன் பாதுகாப்பு அதிகாரியாக தன்னை காட்டிக் கொண்டார்? என காவல்துறையினரால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் பவார் பணத்திற்காக இதை செய்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர். காவல்துறையினர் தொடர்ந்து பவாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.