ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அமித் ஷா, “வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து ராகுல் பாரத் ஜோடா யாத்திரை மேற்கொள்கிறார்.
நாட்டின் நாடாளுமன்றத்தில் இந்தியா ஒரு தேசம் அல்ல என்று அவர் பேசியதை நான் நினைவுப் படுத்த விரும்புகிறேன். ராகுல் அதை எந்தப் பக்கத்தில் படித்தார் என்று எனக்கு தெரியவில்லை.
லட்சக்கணக்கான மக்கள் தங்களது தலையை தியாகம் செய்து இந்த பூமியை பெற்றார்கள். இந்த நாட்டுக்காக ஆயிரக் கணக்கான சகோதரிகள் தீக்குளித்துள்ளனர். ஆனால் இது உங்களுக்கு ஒரு நாடாக தெரியவில்லை? என்றார்.
தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை சுட்டிக் காட்டிய அமித் ஷா, 2024ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள 25 மக்களவை தொகுதிகளிலும் பாரதிய ஜனதாவை வெல்ல வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, பெங்களூருவில் பாஜக 3 ஆண்டுகால ஆட்சி கொண்டாட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “இந்தியாவை ஒன்றிணைப்போம் என ராகுல் காந்தி பேரணி கொண்டுள்ளார்.
முதலில் இந்தியாவை துண்டாடியது யார்? இறைவனின் பெயரால் பாரத நாட்டை துண்டாடுவோம் எனப் பேசிய ஒருவரை உங்கள் கட்சியில் உறுப்பினராக அனுமதித்துள்ளீர்கள்” என்றார்.
மேலும், நீங்கள் இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்துள்ளீர்கள். அதை நீங்களே கூறுகிறீர்கள். இந்திய அரசுக்கு எதிரான எனது போர் என்ற உங்களது பேச்சைக் கேட்டேன். உங்களின் அதிகார பசியை கண்டு அதிர்ச்சியடைந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அரசு நிறுவனங்களை பாரதிய ஜனதா கட்டுப்படுத்துகிறது என்ற ராகுலின் குற்றச்சாட்டுக்கு பதிலும் அளித்தார்.
2019 மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேச அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தியை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“