ஷாஹீன்பாக் உள்ளிருப்பு போராட்டம் தொடர்பாக மனுக்களைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், பொது இடங்களை போராட்டக்காரர்கள் காலவரையின்றி ஆக்கிரமிப்பு செய்வதை ஏற்க முடியாது என்றும், வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே போராட்டங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியது.
ஷாஹீன் பாக் பகுதியில் பல மாதங்களாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஜனநாயக முறையில் போராடுவதற்கு உரிமை உண்டு என்ற போதிலும் மற்ற குடிமக்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தியிருந்தது.
இத்தகைய, முற்றுகைப் போராட்டங்களை அகற்றுவது நிர்வாகத்தின் கடமை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஷாஹீன் பாக் போராட்டத்தைக் களைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது. எனவே, நீதிமன்றத்தின் தலையீடு இன்றியமையதாக உள்ளது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கிருஷ்ணா முராரி மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. “பொது இடங்களை காலவரையின்றி ஆக்கிரமிக்க முடியாது. டிசென்ட் (கருத்து வேறுபாடு) இல்லாமல் ஜனநாயகம் இல்லை. ஆனால், ஆர்ப்பாட்டங்கள் மற்ற குடிமக்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது. வரையறுக்கப்பட்ட பகுதியில் மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டும்… போராட்டங்களுக்கு பொது இடத்தை ஆக்கிரமிப்பது ஏற்கத்தக்கது அல்ல” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 21 ம் தீர்ப்பை தேதி குறிப்பிடமால் ஒத்தி வைத்த நீதிபதிகள், "போராடும் உரிமையும், பொது சாலையை பயன்படுத்துவதற்கான மக்களின் அடிப்படை உரிமையும் பிணைக்கப்பட்ட ஒன்று என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், "எதிர்க்கருத்து என்பது ஒரு அடிப்படை உரிமை என்றாலும், அது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது" என்று தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, பொது முடக்கநிலை அமல்படுத்தப்பட்டதை அடுத்து, மார்ச் 23 அன்று, ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தை டெல்லி காவல்துறை அகற்றியது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஷாஹீன் பாக் பகுதியில் 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்றது. டிசம்பர் 15 ஆம் தேதியன்று தென்கிழக்கு டெல்லியில் தொடங்கிய தர்ணா போராட்டத்தை, பெண்கள் முன்னெடுத்து நடத்தினர். அந்தப் போராட்ட வடிவம் நாடு முழுவதும் பரவியது. தமிழகத்திலும், இதன் தாக்கம் நன்கு உணரப்பட்டது.
போரரட்டத்தின் 49வது நாளில், ஷாகின்பாக் பகுதியில் பெண்கள் போராட்டம் நடத்திய இடத்தில் 25 வயது நிரம்பிய நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். ஆனால், எதிர்ப்பாளர்கள் அப்போதும் போராட்டத்தைக் கைவிடவில்லை.
கொவிட்-19க்கு எதிராக பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கின் போது, ஷாஹின்பாக் பகுதியில் பெண்கள் போராட்டம் நடத்திய இடத்தில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகள் வீசினர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் திரு.சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோரை நியமித்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் ஆக்கப்பூர்வமான வகையில் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.