மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அஜித்பவார் மற்றும் அவரது 8 ஆதரவு எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தனர். தொடர்ந்து சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி அரசின் துணை முதல்வராகவும் அஜித்பவார் பதவியேற்றுக் கொண்டார். மேலும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 8 பேருக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், இதில் சிலர் அஜித் பவாருக்கு ஆதரவு மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், டெல்லியில் உள்ள சரத் பவார் இல்லத்தில் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் நடைபெற்றது.
இந்தச் செயற்குழு கூட்டத்தில் 'தலைவர் சரத் பவார் மீது முழு நம்பிக்கையை உள்ளது' என்றும், ஆளும் பா.ஜ.க-வுடன் கைகோர்த்துள்ள பிரபுல் படேல், சுனில் தட்கரே உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ-க்களை கட்சியில் இருந்து நீக்கும் அவரது முடிவுக்கு செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மணி நேரக் கூட்டத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட 8 அம்சத் தீர்மானத்தில், செயற்குழு சரத் பவாருக்கு அரசியல் நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள், கொள்கைகள், கட்சியின் சித்தாந்தத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மற்றும் கட்சி விரோத செயல்படுவோர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அளித்தது.
மேலும், மணிப்பூரின் நிலைமை குறித்து "ஆழ்ந்த கவலையை" வெளிப்படுத்திய செயற்குழு, பாஜக அரசின் ஜனநாயக விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அரசு நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு கண்டனத்தை தெரிவித்தது. பணவீக்கம், வேலையின்மை மற்றும் பெண்களின் அவலநிலை ஆகியவற்றில் விளையும் அரசாங்கக் கொள்கைகளை கண்டிப்பதாகவும் கூறியது.
செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு பேசிய சரத் பாவர், “நான் என்.சி.பி-யின் தலைவர். யாரோ ஒருவர் அறிக்கையை வெளியிட்டு எதையும் கூறலாம். அது எதையும் குறிக்காது. 82 அல்லது 92 வயதாக இருந்தாலும் நான் இப்போதும் மிகவும் திறம்பட வேலை செய்வேன்.
கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவோம். தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. சட்ட நிலையைப் பொறுத்த வரையில், அந்த விருப்பத்தைப் பற்றி நாம் சிந்திக்கலாம். ஆனால் அதற்கான தேவை எழும் என்று நான் நினைக்கவில்லை." என்று அவர் கூறினார்.
அஜித் பவார் தனது பிரிவை உண்மையான என்.சி.பி என அங்கீகரிக்கக் கோரி ஜூன் 30ஆம் தேதி தேர்தல் ஆணையத்தை அணுகியதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அஜித் பவாருக்கு ஆதரவாக என்.சி.பி எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.எல்.சி-களிடம் இருந்து ஜூன் 30 தேதியிட்ட சுமார் 40 பிரமாணப் பத்திரங்களை தேர்தல் குழு புதன்கிழமை பெற்றுள்ளது.
இதுகுறித்து சரத் பாவர் பேசுகையில், "முக்கியமான ஆவணங்கள் இந்த நாட்டில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல ஐந்து நாட்கள் ஆகுமா?
அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுவதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். ஆனால், மக்களின் ஆதரவு எங்களுக்குத் தான் உள்ளது என்ற ஒன்று மட்டும் எனக்கு நன்றாக தெரியும்.
கட்சியின் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ பேசுகையில், கட்சியின் 27 மாநில பிரிவுகளின் ஆதரவு இந்த செயற்குழுவிற்கு உள்ளது. அனைத்து மாநில பிரிவு தலைவர்களும் இன்று கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் ஐந்து பேரைத் தவிர, கடிதங்கள் மூலம் தங்கள் ஆதரவை அனுப்பியுள்ளனர்," என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வியாழக்கிழமை சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.