சரத் பவார் தேசியவாத காங்கிரஸை (என்.சி.பி) சர்வாதிகார முறையில் நடத்தினார் என்று தேர்தல் ஆணையத்திடம் (இ.சி) கூறியதாகக் கூறப்படும் நிலையில், அஜித் பவார் தலைமையிலான அணி, சரத் பவார் மீது உயர்ந்த மரியாதை வைத்திருப்பதாகக் கூறி யு-டர்ன் அடித்துள்ளது.
"தேர்தல் ஆணையத்தின் முன் சரத் பவார் சர்வாதிகார முறையில் கட்சியை நடத்தினார் என்று நாங்கள் கூறவில்லை... எங்கள் வழக்கறிஞர்கள் சில வாதங்களை முன்வைத்துள்ளனர். இது அவர்களின் சட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்" என்று என்.சி.பி செய்தித் தொடர்பாளர் அமோல் மிட்காரி செவ்வாயன்று கூறினார். தேர்தல் ஆணையத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் என்ன என்ற தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது இதை அவர் கூறினார்.
கடந்த ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கிளர்ச்சி ஏற்பட்டது. சரத் பவாரின் உறவினர் அஜித் பவார் தலைமைக்கு எதிராக போர் கொடி தூக்கினார். இதையடுத்து கட்சி இரு அணிகளாக பிரிந்து செயல்கிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அதிகாரப்பூர்வமாகப் பெற தேர்தல் ஆணையத்தின் முன் விசாரணை நடைபெறுகிறது. சின்னம், பெயர் கோரி அஜித் பவார் குழு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் விசாரணையின் முதல் நாளில், அஜித் பவார் தரப்பு வழக்கறிஞர் குழு சரத் பவாரை "சர்வாதிகாரி" என்று குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/cities/pune/sharad-pawar-ajit-pawar-ncp-maharashtra-8976097/
மிட்காரி கூறுகையில், “எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் எங்கள் வழக்கறிஞர்களிடம் தெரிவித்தோம். அவர்கள் வைக்கும் வாதங்கள் அவர்களின் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். எங்கள் தரப்புகளை வழக்கறிஞர்கள் மூலம் சமர்ப்பித்துள்ளோம். வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். ஆனால் அதை நாங்கள் சொல்லவில்லை... சரத் பவார் மீது எங்களுக்கு அதிக மரியாதை உள்ளது... அது எப்போதும் , எதிர்காலத்திலும் இருக்கும்,” என்றார்.
சரத் பவார் ஒரு சர்வாதிகாரி போல் கட்சியை நடத்துகிறார் என்பதை என்.சி.பி எப்போது உணர்ந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த மிட்காரி, “என்.சி.பி அரசியலமைப்பு விதிமுறைகளின்படி இயங்குகிறது. எங்கள் கட்சியில் சர்வாதிகார நடவடிக்கைக்கு இடமில்லை. இந்த கட்சி கட்சியல்ல, குடும்பம். வழக்கறிஞர்களின் வாதங்கள் நீதித்துறை செயல்முறையின் ஒரு பகுதியாகும்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“