தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், கடந்த சில நாள்களுக்கு முன்பு, தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திங்கள்கிழமை, தனக்கு பின்னர் கட்சியை திறம்பட வழிநடத்த வாரிசு ஒன்றை உருவாக்குவதில் சரத் பவார் தவறிவிட்டார் என சிவ சேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சதாராவில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த சரத் பவார், “இந்த விமர்சனங்களை தாம் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து, “எழுதுவது அவர்களின் உரிமை. அவர்கள் எழுதட்டும்.
நான் இதையெல்லாம் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. எங்களுக்கு தெரியும், கட்சியை எப்படி வழிநடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 1999ல் கட்சி தொடங்கிய போது காங்கிரஸிடம் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் பங்கு பெற்றதை நினைவு கூர்ந்த அவர், “அக்காலகட்டத்தில் தங்களின் அமைச்சர்கள் மாநில வளர்ச்சிக்கு பக்க பலமாக நின்றனர்” என்றனர்.
மேலும், காங்கிரஸின் பிரதிவிராஜ் சௌகான் கருத்துக்கு காட்டமாக பதில் அளித்த பவார், “காங்கிரஸில் அவருக்கு என்ன இடம் இருக்கிறது” என்றார்.
இந்த நிலையில் சாம்னாவில் வெளியான தலையங்கள் சரத் பவார் மீதான விமர்சனம் இல்லை. அது ஓரு பார்வை மட்டுமே என நாளேட்டின் ஆசிரியரும் சிவசேனா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மராட்டியத்தில் சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் சரத் பவார் ஆவார். தற்போது அங்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் சரத் பவார் நெருக்கம் காட்டி வருகிறார் எனக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“