நாக்பூர்: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, 288 தொகுதிகளில் 160 தொகுதிகளைப் பெற்றுத்தர முடியும் என்று சிலர் தன்னை அணுகியதாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் (சரத்பவார் பிரிவு) சரத்பவார் சனிக்கிழமை தெரிவித்தார். இந்த விஷயத்தில் ராகுல் காந்தியுடன் கலந்து பேசியதாகவும், ஆனால் இந்த 'சலுகையை' இருவரும் நிராகரித்ததாகவும் அவர் கூறினார்.
நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார், "சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, இரண்டு பேர் டெல்லியில் என்னை சந்தித்தனர். மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளில், 160 தொகுதிகளுக்கு உத்தரவாதம் அளிப்பதாக அவர்கள் கூறினர். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தேர்தல் ஆணையத்தின் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றாலும், இதுபோன்ற நபர்கள் வருவது வழக்கம். எனவே, நான் அவர்களை முதலில் பொருட்படுத்தவில்லை."
"பின்னர், ராகுல் காந்தியுடன் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்தேன். அவர்கள் ராகுல் காந்தியிடமும் அதே விஷயத்தைச் சொன்னார்கள். ஆனால், ராகுல் காந்தியும் நானும் இதுபோன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று உணர்ந்தோம். இது நமது வழி அல்ல. நாம் மக்களிடம் சென்று அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான வழிகளைக் காண வேண்டும் என்று முடிவு செய்தோம்" என்று சரத்பவார் கூறினார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு:
தேர்தல் முறைகேடுகள் குறித்து ராகுல் காந்தி சமீபத்தில் அளித்த விளக்கத்தை சரத்பவார் பாராட்டினார். மேலும், தேர்தல் ஆணையம் அவரிடம் தனி பிரமாணப் பத்திரம் கோரியதையும் அவர் விமர்சித்தார். "தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு. ராகுல் காந்தி ஏற்கனவே பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டதால், தனி பிரமாணப் பத்திரம் தேவையில்லை. தேர்தல் ஆணையம் இன்னும் அதை கேட்டால், அது சரியல்ல.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆழமாக விசாரிக்கப்பட வேண்டும். உண்மை வெளியே வர வேண்டும். என்னுடைய ஒரே கேள்வி, தேர்தல் ஆணையம் தொடர்பாகத்தான் ஆட்சேபனை எழுப்பப்பட்டது. அப்படியிருக்க, பி.ஜே.பி தலைவர்களும் முதல்வரும் ஏன் பதிலளிக்க வேண்டும்? நாங்கள் பி.ஜே.பியிடமிருந்து அல்ல, தேர்தல் ஆணையத்திடமிருந்து பதிலைக் கேட்கிறோம்," என்று பவார் கூறினார்.
உத்தவ் தாக்கரேவின் இருக்கை குறித்த நகைச்சுவை
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் உத்தவ் தாக்கரேவின் இருக்கை குறித்து எழுந்த சர்ச்சையையும் சரத்பவார் நகைச்சுவையாகப் பேசினார்.
"முதலாவதாக, உத்தவ் தாக்கரே டெல்லியில் அமர்ந்திருந்த இடம் குறித்து நேற்று முதல் அரசியல் நடப்பதைப் பார்க்கிறேன். ஒரு பிரெசண்டேஷன் பார்க்கும்போது, ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது, நீங்கள் முன் வரிசையில் அமரமாட்டீர்கள், பின்னால் அமர்வீர்கள். அதுபோல, நானும் பின்னால் அமர்ந்திருந்தேன். முக்கிய விஷயம், திரைக்கு அருகில் அமரக்கூடாது; சற்று இடைவெளி விட்டு அமர வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, உத்தவ் தாக்கரே அமர்ந்திருந்த இடம் குறித்து அரசியல் செய்யப்படுகிறது," என்று அவர் கூறினார்.
தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம்:
சரத்பவாரின் கருத்துகளுக்குப் பிறகு, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், எதிர்க்கட்சிகள் பொய் சொல்வதையும், உண்மைக்கு அஞ்சிக் குழப்பங்களை ஏற்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன என்று கூறினார். "ராகுல் காந்தி பெரும்பாலும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து சந்தேகம் எழுப்பினாலும், சரத்பவார் அப்படிச் சொன்னதில்லை. மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை குற்றம் சாட்டுவது தவறு என்ற நிலைப்பாட்டையே அவர் எப்போதும் கொண்டிருந்தார். ஆனால், இப்போது ராகுல் காந்தியின் சந்திப்புக்குப் பிறகு, சரத்பவார் திடீரென வாக்களிப்பு நடைமுறைகள் குறித்துப் பேசத் தொடங்கிவிட்டார். இது ராகுல் காந்தியின் சந்திப்பின் விளைவு.
எதிர்க்கட்சிகள் எவ்வளவு குழப்பங்களை உருவாக்கினாலும், இந்தியாவில் நடப்பது போல வெளிப்படையான, சுதந்திரமான தேர்தல்கள் வேறு எங்கும் நடைபெறுவதில்லை. மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தைக் குற்றம்சாட்டுபவர்கள் பொது இடங்களில் பேசுகிறார்கள். ஆனால், பிரமாணப் பத்திரம் கொடுக்கத் தயாராக இல்லை. அவர்கள் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், பாராளுமன்றத்தில் எடுத்த சத்தியப்பிரமாணம் உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் செல்லுமா? அவர்கள் பொய் பேசினால், எதிர்காலத்தில் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களுக்குத் தெரியும். எனவே, இவர்கள் கோழைகள்; தினமும் பொய் சொல்லி ஓடிவிடுகிறார்கள்," என்று பட்னாவிஸ் விமர்சித்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.