காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த மறுநாள், ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் கே.என். திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மக்களவை எம்.பி சசி தரூர் இடையே நேரடியான போட்டி ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் ஏ.கே. ஆண்டனி உள்ளிட்ட தலைவர்களை கார்கே சந்தித்தபோது, சசி தரூர் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். பாபாசாகேப் டாகர் அம்பேத்கர் 1956-ம் ஆண்டு பௌத்தம் தழுவிய, நாக்பூரில் உள்ள தீக்ஷா பூமியில் அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவரான மதுசூதன் மிஸ்திரி, சில கையெழுத்துகள் பொருந்தாததால், திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் இடையே போட்டி என்று அறிவித்தவுடன், சசி தரூர் தன்னை முன்மொழிபவர்களின் பட்டியலை ட்வீட் செய்தார்.
சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம், பிரத்யுத் போர்டோலோய், எம்.கே. ராகவன் மற்றும் முகமது ஜாவேத் ஆகிய எம்.பி.க்களும் காங்கிரஸ் மூத்த தலைவர் மொஹ்சினா கித்வாய் மற்றும் முன்னாள் எம்.பி ஜி-23 தலைவர்களில் ஒருவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சந்தீப் தீட்சித், முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த தலைவருமான சைஃபுதீன் சோஜ் மற்றும் அவருடைய மகன் ஆகியோர் சசி தரூரை முன்மொழிந்துள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் சனிக்கிழமை செய்தி வெளியிட்டது.
சசி தரூர் தனது சொந்த மாநிலமான கேரளாவில் இருந்து, தம்பனூர் ரவி, கேரள இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.சபரிநாத் ஆகியோரின் ஆதரவைப் பெற்றார்.
“என்னை முன்மொந்த 6 பேர்களின் பெயர்களை அளிக்கிறேன். 12 மாநிலங்கள், அனைத்து மட்டத்தில் உள்ள தலைவர்களும், அனைத்து பெருமைமிக்க காங்கிரஸ் நிர்வாகிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களே, உங்கள் அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றி” என்று சசி தரூர் ட்வீட் செய்துள்ளார்.
சசி தரூர் தன்னை மாற்றத்திற்கான வேட்பாளராக கூறும் நிலையில், “நாளைக்காக சிந்தியுங்கள், சசி தரூரை யோசியுங்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளார். மல்லிகார்ஜுன் கார்கேவின் வேட்புமனுவில் அவரை முன்மொழிந்தவர்களில் ஒருவரான மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித்தின் விமர்சனத்திற்கு தரூர் ஆளானார்.
“கார்கேவிடம் தொடர்ச்சிக்கான கூறுகள் உள்ளன, சசி தரூரிடம் மாற்றத்தின் கூறுகள் உள்ளன என்று சசி தரூர் கூறுகிறார். ஆனால், தொடர்ச்சி மற்றும் மாற்றம் என்பது அகநிலை சொற்கள், சார்பு சொற்கள்” என்று சல்மான் குர்ஷித் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மேலும், “காங்கிரஸ் இந்தத் தேர்தலை நடத்துகிறது என்பது மாற்றத்துடன் தொடர்ச்சியை மீண்டும் வலியுறுத்துவது ஆகும். ஏனெனில், காங்கிரஸ் தேர்தலை நடத்துவது இது முதல் முறை அல்ல” என்று அவர் கூறினார்.
சசி தரூர் ஞாயிற்றுக்கிழமை, வார்தாவில் உள்ள மகாத்மா காந்தியின் சேவாகிராம் ஆசிரமத்திற்கும், பாவ்னாரில் உள்ள வினோபா பாவேயின் ஆசிரமத்திற்கும் செல்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.