ஷீரடி சாய்பாபா கோயிலில் நாணயங்களாக வரும் உண்டியல் காணிக்கை விவகாரத்திற்கு, இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடு காரணமாக தீர்வு கிடைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கிழக்கு மும்பை பகுதியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில், நாட்டில் உள்ள அதிக பக்தர்கள் வழிபடும் மற்றும் அதிகமாக உண்டியல் காணிக்கை செலுத்தும் முதல் 10 இடங்களில் உள்ளது. இந்த கோயிலில், ஆண்டு ஒன்றிற்கு 10 மில்லியன் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களின் மூலம், ரூ. 500 கோடி அளவிற்கு கோயிலுக்கு பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மூலம் வருவாய் கிடைக்கிறது.
பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மற்றும் நன்கொடைகள் மூலம் கிடைக்கும் வருவாய், ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட்டின் (SSST) மூலம் நிர்வகிக்கப்பட்டு, 16 பொதுத்துறை வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மற்றும் நன்கொடைகளில் ரூ. 4 கோடி அளவிற்கு 1, 2, 5 மற்றும் 10 ரூபாய் மதிப்புள்ள நாணயங்களாகவே உள்ளது. இந்த நாணயங்களை ஏற்க, பொதுத்துறை வங்கிகள் அவ்வப்போது மறுத்து வருகின்றன. இதற்காக, ஒவ்வொரு முறை ஒவ்வொரு வங்கி என, கோயில் டிரஸ்ட் நிர்வாகமும் மாறி மாறி டெபாசிட் செய்து வந்தன. அப்போதும் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்தபாடில்லை.
ரிசர்வ் வங்கி தலையீடு : நாணயங்கள் டெபாசிட் செய்யும் விவகாரத்தில் தீர்வு காண இந்திய ரிசர்வ் வங்கியே களம் இறங்கியது. நாணயங்களை டெபாசிட் வாங்குவதில் வங்கிகளுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு நடத்தியது. இந்த நாணயங்களை சேகரித்து வைத்துக்கொள்ள போதிய இடமின்மை, நாணயங்களை எண்ணுவதில் ஏற்படும் சிரமம், நாணயங்களை வங்கிக்கு எடுத்து செல்லும் போது ஏற்படும் இடையூறு மற்றும் அதை மீண்டும் மக்களின் பொதுப்புழக்கத்திற்கு விடும் வரையிலான காரணிகள், வங்கிகளின் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில், ரிசர்வ் வங்கி, ஷீரடி கோயிலின் உள்ளேயே ஒரு உயர்தர பலஅடுக்கு கொண்ட பாதுகாப்பு அறையை அமைக்க அனுமதி அளித்துள்ளது. இந்த அறையிலேயே அந்த நாணயங்களை வைத்துக்கொள்ளவும், வாரத்தின் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில், வங்கிகள் அந்த நாணயங்களை டெபாசிட் செய்துகொள்ள அனுமதி அளித்துள்ளது.
ஷீரடி கோயிலுக்கு காணிக்கை மற்றும் நன்கொடைகளின் மூலம் வருவாய், கோயில் பண்டிகைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படாமல், சமூக முன்னேற்றம், கல்வி சார்ந்த பணிகள் உள்ளிட்டவைகளுக்கு SSST டிரஸ்டின் மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது, ஷீரடி நகரின் வளர்ச்சிக்கும் இந்த டிரஸ்ட் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.