/tamil-ie/media/media_files/uploads/2018/01/shiv-sena-meeting.1.jpeg)
Shiv Sena, Uddhav Thackeray, Maharashtra State
பிரதமர் நரேந்திர மோடி, ‘வெளிநாட்டு தலைவர்களுடன் பட்டம் விடவே ஆர்வமாக இருப்பதாக’ சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்குதல் தொடுத்திருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இன்று (ஜனவரி 23) சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்குதல் தொடுத்திருக்கிறார். இந்துத்வா கொள்கையில் ஊறிய சிவசேனா கட்சியின் தலைவர், மோடிக்கு எதிராக கடுமையான வார்த்தைப் போர் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பையில் இன்று கூடிய சிவசேனா தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசுகையில்தான் உத்தவ் தாக்கரே இந்தக் கடும் வார்த்தைப் போரை நடத்தியிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரேவை மீண்டும் சிவசேனா தலைவராக தேர்வு செய்தனர். 2019 தேர்தலை தனித்து சந்திக்க இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உத்தவ் தாக்கரே தனது பேச்சின்போது, முதலில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை விமர்சித்தார். ‘இந்திய கடற்படை குறித்து நிதின் கட்கரி பேசியதை கேட்டதும், எனக்கு கடுமையான கோபம் வந்தது. (மும்பையின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடற்படை முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துவதாக ஜனவரி தொடக்கத்தில் நிதின் கட்கரி கூறியிருந்தார்).
அவர்கள் (ராணுவம்) எல்லையில் நிற்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடக்கும்போது, எந்த கூச்சமும் இல்லாமல் முழுப் பெருமையையும் நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள். நாட்டின் தலைமைப் பொறுப்பில் சுய முக்கியத்துவம் கொடுப்பவர்களே இருக்கிறார்கள். எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் மோசடிகள் மூலமாகவே இன்று கட்சிகள் ஆட்சிக்கு வருவதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது.
நாம் வலிமையான தலைவரை பெற்றிருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அகமதாபாத்தில் வெளிநாட்டுத் தலைவர்களுடன் பட்டம் விடும் தலைவர்களையே நாம் பெற்றிருக்கிறோம். (அண்மையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் இணைந்து அகமதாபாத்தில் மோடி பட்டம் விட்டார்). ஏன் இந்த வெளிநாட்டுத் தலைவர்களை குஜராத்தை நோக்கியே அழைத்துச் செல்கிறீர்கள்? காஷ்மீருக்கும் மற்ற மாநிலங்களுக்கும் ஏன் அழைத்துச் செல்வதில்லை?’ என கேள்வி எழுப்பிய உத்தவ் தாக்கரே, பொய்யான வாக்குறுதிகளை பாஜக வீசியதாகவும் சாடினார்.
‘இந்தியாவின் பசுக்களை கொல்வது குற்றம். ஆனால் பொய்களை சொல்வது குற்றம் இல்லையா? தேர்தல் வரும்போது, ‘வளர்ச்சி’ பற்றிய முழக்கத்தை கேட்கிறோம். ஆனால் நாம் முன்னோக்கிப் போகிறோமா, பின்னோக்கிப் போகிறோமா? என யாருக்கும் தெரியவில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை.
இப்போதைய அரசுக்கும் முந்தையை அரசுக்கும் பெரிய வித்தியாசத்தை மக்களால் காண முடியவில்லை. குஜராத்தில் பாஜக தனது தளத்தை இழந்திருக்கிறது. காங்கிரஸுக்கு அங்கு ஓரளவு லாபம் கிடைத்திருக்கிறது. அங்கு மாற்றாக ஒரு மாநிலக் கட்சி இருந்திருந்தால், மக்கள் அந்தக் கட்சிக்கு வாக்களித்திருப்பார்கள்.
இப்போதைய அரசு விளம்பரங்களில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. விளம்பரங்களுக்காக கோடிகளை செலவு செய்கிறது. ஆனால் மக்கள் வளர்ச்சிக்கு பெரிதாக செய்வதில்லை. வருகிற காலங்களில் இந்துத்வா கொள்கையை முன்னிறுத்தி மகாராஷ்டிரா உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் நாம் போட்டியிடுவோம்.’ என்றார் உத்தவ் தாக்கரே.
‘இந்துத்வா வாக்குகளை சிதறக்கூடாது என்கிற நோக்கில் முன்பு பாஜக.வுடன் கூட்டணி அமைக்க நேர்ந்தது. இனி அப்படி நடக்காது’ என்றும் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.