/tamil-ie/media/media_files/uploads/2018/06/Uddhav-Thackeray.jpg)
Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live - Uddhav Thackeray
சிவசேனா கட்சியின் 52வது ஆண்டு விழாவினை மும்பையில் கொண்டாடியது சிவசேனா கட்சி. இதைப் பற்றி அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாமானாவில் செய்தி வெளியிட்டிருக்கின்றது சிவசேனா. 2014ல் சிவசேனா பிஜேபியுடன் கூட்டணி அமைத்திருந்தது. ஆனால் 2014ல் செய்த பிழையினை 2019ஆம் ஆண்டு வரும் தேர்தலில் நிச்சயம் செய்ய மாட்டோம். 2019 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு மகாராஷ்ட்ராவில் ஆட்சியினை அமைப்போம் என்றும் சிவசேனா தலைமை முடிவு எடுத்திருக்கின்றது.
நாட்டின் சூழ்நிலை அதிகமாக மாறி வருகின்றது. நாங்கள் அதிகாரத்திற்கு வந்த பின்பும் மக்களின் நலன் கருதி மட்டுமே செயல்படுவோம். இனி மூர்க்கத்தனமாக எக்காரணம் கொண்டும் செயல்படமாட்டோம் என்று சிவசேனா திட்டம்வட்டமாக முடிவெடுத்திருக்கின்றது. 2019ல் சிவசேனா மீண்டும் மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மகாராஷ்ட்ராவின் தேவை குறித்து மத்திய அரசிற்கு நெருக்கடி தரும் அமைப்பாக சிவசேனா செயல்படும் என்றும் அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கின்றது.
பல்வேறு தளங்களில் நடைபெறும் பிரச்சனைகளைப் பற்றியும் பேசியிருக்கும் அப்பத்திரிக்கை ஆம் ஆத்மி கட்சிக்கும் டெல்லியின் ஆளுநர் அனில் பைஜாலுக்கும் இடையிலான பிரச்சனைகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றது. தொடர்ந்து மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகளால் பிரச்சனைகள் நிகழ்ந்து கொண்டே இருக்குமானால், யாரும் தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆட்சி நடத்த இயலாது என்று குறிப்பிட்டிருக்கின்றது.
டெல்லியில் மட்டும் புயல் வீசவில்லை. மோடியை தலைமையாக ஏற்றுக் கொண்ட பின்பு மக்கள் மனதிலும் புயல் வீசிக் கொண்டே தான் இருக்கின்றது. ஒவ்வொரு நாடாக பயணித்துக் கொண்டிருப்பதால் அவருக்கு டெல்லியின் மாசான சூழலும் தெரியாது. அவருக்கு அதனால் மூச்சுப் பிரச்சனைகளும் வராது என்று கடுமையாக விமர்சித்திருக்கின்றது.
சிவசேனா அதிக ஆதரவுடன் மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்கும், பின்பு டெல்லியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதையும் சிவசேனாவே தீர்மானிக்கும் நாள் வரும். அந்த அளவிற்கு நம்பிக்கை உடையதாக இருக்கின்றது எங்களின் கட்சி என்று குறிப்பிட்டுள்ளது.
அசாம் கான பரிஷாத் அமைப்பின் உறுப்பினர் சிவசேனாவின் பொதுச் செயலாளார் உத்தவ் தாக்ரேவை சந்தித்தைப் பற்றியும், பிஜேபி கட்சித் தலைவர் அமித் ஷா உத்தவ் தாக்ரேவை சந்தித்தைப் பற்றியும் எழுதியிருக்கின்றது அப்பத்திரிக்கை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.