சிவசேனா 2019-ல் தனித்து போட்டி : தேசிய செயற்குழுவில் அறிவிப்பு

சிவசேனா 2019 தேர்தலில் தனித்து போட்டியிட இருக்கிறது. இன்று நடைபெற்ற தேசிய செயற்குழுவில் அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சிவசேனா 2019 தேர்தலில் தனித்து போட்டியிட இருக்கிறது. இன்று நடைபெற்ற தேசிய செயற்குழுவில் அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சிவசேனா – பாரதிய ஜனதா கூட்டணி, மகாராஷ்டிரா மாநிலத்தில் நீண்ட பாரம்பரியம் கொண்டது. இடையிடையே சிவசேனா முறுக்கிக் கொண்டாலும்கூட, இந்துத்வா அமைப்புகள் இரு தரப்பையும் அழைத்து சமரசம் செய்து வைப்பதுதான் வாடிக்கை!

சிவசேனாவின் விமர்சனங்கள் அண்மைகாலமாக எல்லை மீறுவதாக பாஜக.வுக்கு வருத்தம் உண்டு. இந்தச் சூழலில் மும்பையில் இன்று (ஜனவரி 23) சிவசேனாவின் தேசிய செயற்குழு கூடியது. இதில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ‘2019 தேர்தலிலும், மாநில சட்டமன்றத் தேர்தலிலும் சிவசேனா தனித்துப் போட்டியிடும்’ என அறிவித்தார்.

சிவசேனாவின் இந்த அறிவிப்பு பெரிய மாநிலங்களில் ஒன்றான மஹாராஷ்டிராவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சிவசேனா இளைஞர் பிரிவின் தலைவரான ஆதித்யா தாக்கரேவுக்கு கட்சியின் தேசிய செயற்குழுவில் இடம் கொடுத்தும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலமாக கட்சித் தலைமைப் பொறுப்பை நோக்கி அவர் நகர்த்தப்பட்டிருக்கிறார்.

யுவ சேனா தலைவரான ஆதித்யா தாக்கரே கடந்த டிசம்பரில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸு’க்கு அளித்த பேட்டியில், ‘சிவசேனா தேசிய அரசியலில் நுழைகிறது. குஜராத், கோவாவில் நாங்கள் ஏற்கனவே போட்டியிட்டோம். அதேபோல அடுத்த ஆண்டு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் தேர்தல்களில் போட்டியிடுவோம்.

உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் காஷ்மீரில் கவுரவமான வாக்குகளை நாங்கள் வாங்கியிருக்கிறோம். கேரளாவிலும்கூட நாங்கள் போட்டியிடுவோம்’ என கூறியது நினைவு கூறத்தக்கது. இதன் மூலமாக பாஜக.வுக்கு போட்டியாக தேசியக் கட்சியாக உருவெடுக்கும் சிவசேனாவின் ஆசை வெளியாகி இருக்கிறது.

 

×Close
×Close