இந்தியாவில் முஸ்லீம்கள் வாழ வேண்டிய அவசியம் இல்லை என்றும், இந்திய முஸ்லீம்கள் பாகிஸ்தான் அல்லது வங்காள தேசத்திற்கு செல்லட்டும் என்று பாஜக எம்பி வினய் கட்டியார் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாஜக எம்பி வினய் கட்டியார், தாஜ்மகாலை விரைவில் தேஜ் கோயிலாக மாற்றுவோம் என்று கூறியிருந்தார். வினய் கட்டியாரின் இந்த பேச்சு நாடு முழுவதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. அதுக்குறித்து வினய் கட்டியார் கூறியதாவது, ”தாஜ்மகால் என்பது மொகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்திற்கு முந்தையது. ஆரம்பத்தில் அது தேஜ் கோயிலாக இருந்தது. அதன் பின்பு ஒளரங்கசீப் மயானமாக மாற்றி விட்டார். இருந்தும் மக்கள் மனதில் அது சிவனின் ஆலயமாகவே பார்க்கப்படுகிறது. இதனால், தற்போது உள்ளவர்களால் தாஜ்மகால் என்று அழைக்கப்படும் இது, விரைவில் தேஜ் கோயிலாக மாற்றப்படும்” கூறியிருந்தார்.
இந்த கருத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் உட்பட அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சர்ச்சை முடிவதற்குள் பாஜக எம்பி வினய் கட்டியார் மீண்டும் ஒரு கருத்தைக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாஜக அரசு, முஸ்லீம் மக்களுக்கு எதிராக செயல்படுவதாக பல்வேறு வதந்திகள் நாட்டில் பரபரப்பட்டு வருவதாகவும், அதில் துளி அளவும் உண்மையில்லை என்று பிரதமர் மோடி பல இடங்களில் தெரிவித்து வருகிறார். இருப்பினும், பாஜக தலைவர்கள் பலர், முஸ்லீம் மக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்கின்றனர்.
இந்த வகையில் எம்பி வினய் கட்டியார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “ முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இது அவர்களுக்கான இடம் இல்லை. அவர்கள் பாகிஸ்தான் அல்லது வங்காளதேசத்தில் தான் வாழ வேண்டும். இந்தியாவில் முஸ்லீம்கள் வாழ வேண்டிய அவசியமே இல்லை. மக்கள் தொகை அடிப்படையில் அவர்களை பிரித்த போது, இந்திய நாட்டிற்குள் அவர்கள் வருவதற்கான அவசியம் என்ன? அவர்களுக்காக தனி நாடு, தனி நிலம் ஒதுக்கிய பிறகும் அவர்கள் பாகிஸ்தான், வாங்காள தேசத்திற்கு செல்லாமல் இந்தியாவில் வாழ வேண்டிய காரணம் என்ன? இந்தியாவின் தேசிய கீதத்தையும், தேசிய கொடியையும் அவமதிப்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் “ என்று கூறியுள்ளார்.
வினய் கட்டியாரின் இத்தகைய பேச்சு, அவரின் கட்சியைச் சார்ந்த பாஜக தலைவர்களையே அதிரூப்தி அடைய செய்துள்ளது.