மும்பையில் சாலையோர பாஸ்ட் புட் கடையொன்றில், உணவு குறித்து புகார் கூறிய வாடிக்கையாளர் ஒருவர் மீது, அந்த கடையின் ஊழியர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள உல்லாஸ் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள சாலையோர் பாஸ்ட் புட் கடையொன்றில் வாடிக்கையாளர் ஒருவர் உணவின் தரம் குறித்து புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், அந்த வாடிக்கையாளருக்கும் கடை ஊழியருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது, வாடிக்கையாளர் அங்கு கையில் கிடைத்த பொருளொன்றை எடுத்து வீசினார். இதனால், ஆத்திரமடைந்த ஊழியர் கொதிக்கும் எண்ணெயை பாத்திரமொன்றில் அள்ளிக்கொண்டு அந்த வாடிக்கையாளர் மீது ஊற்றுகிறார். அதன்பிறகு, மீண்டும் கொதிக்கும் எண்ணெயை அள்ளிக்கொண்டு அந்த வாடிக்கையாளரை துரத்தி ஓடுகிறார்.
எண்ணெய் ஊற்றப்பட்டதால் வாடிக்கையாளருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இச்சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்ஃபோனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.