பஞ்சாப் மாநிலத்தில் பிரபல ரவுடியான விக்கி கவுண்டர் மற்றும் அவரது கூட்டாளிகளை அம்மாநில போலீசார் எண்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.
பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள நாபா சிறையை உடைத்து, பிரபல தீவிரவாதி ஹர்மிந்தர் உள்ளிட்ட ஐந்து பேரை மீட்க, சிறைக்காவலர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தவர் விக்கி கவுண்டர். பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக விக்கி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய குற்றவாளியான விக்கி கவுண்டரை அம்மாநில போலீசார் நீண்ட நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில், விக்க கவுண்டர் மற்றும் அவரது கூட்டாளிகளை பஞ்சாப் காவல் துறையினர் துப்பாக்கி முனையில் சுட்டுக் கொன்றனர்.
பஞ்சாப் எல்லைப்பகுதில் ராஜஸ்தானில் உள்ள கிராமத்தில் விக்கி கவுண்டர் மற்றும் அவரது கூட்டாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற காவல் துறையினர், அவர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் விக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், விக்கியுடன் இருந்த ஹர்ஜிந்தர் புல்லார், பிரேமா லஹோரியா, சுக்ப்ரீத் சிங் ஆகிய மூவரும் அடுத்தடுத்தாக போலீசாரின் தாக்குதலில் பலியாகினர்.
இந்த தாக்குதலில், போலீசாருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலை 6 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.