J&K announces Class 5-12 exams, J&K Education, J&K Normalcy , J&K militants attack : | Indian Express Tamil

மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கும் முயற்சி.. ஜம்மு காஷ்மீரில் 5 – 12 ம் வகுப்புகளுக்கு விரைவில் தேர்வு

காஷ்மீர் 5 முதல் 12 ம் வகுப்புகளுக்கு தேர்வு நாள் அறிவிப்பு : இயல்புநிலையைக் காண்பிப்பதற்காக, இந்த  அரசு எங்கள் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைக்கின்றது.

மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கும் முயற்சி.. ஜம்மு காஷ்மீரில் 5 – 12 ம் வகுப்புகளுக்கு விரைவில் தேர்வு
J&K announces Class 5-12 exams

J&K announces Class 5-12 exams : மத்திய அரசு ஜம்மு-காஷ்மீரின் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததாலும், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததாலும் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் இருக்கும் போது , ஜம்மு- காஷ்மீர் நிர்வாகம்  5 முதல் 12 ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதிதேர்வு தேதிகளை தற்போது அறிவித்துள்ளது. ஜம்மு மாநில கல்வி மையமும் , ஜம்மு- காஷ்மீர் பள்ளிக்கல்வி வாரியமும்  5 முதல் 12 வகுப்புகளுக்கு தனித்தனியாக தேர்வுக்கான தேதிகளை வெளியிட்டுள்ளன.

2016ம் ஆண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் போதும், அப்போது  இருந்த மெஹபூபா முப்தி  அரசு இதே போன்று  பள்ளிகளை திறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு- காஷ்மீர் பள்ளிக்கல்வி வாரியத் தலைவராக இருக்கும் வீணா பண்டிதா, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு   அளித்த பேட்டியில், ” 10 ம் வகுப்புக்கான தேர்வுகள் அக்டோபர் 29ம் தேதியிலும் , 12 ஆம் வகுப்புக்கான இறுதி தேர்வுகள்  அக்டோபர் 30ம் தேதியிலும் , 9 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் நவம்பர் 18 முதல் தொடங்கும்” என்றார்.

ஆனால் இந்த முடிவு பெற்றோர்களுக்கு கவலை அளிப்பதாகவே உள்ளது என்று ஸ்ரீநகரின் புச்ச்போரா பகுதியில் வசிக்கும் அஜாஸ் அகமது கூறியுள்ளார். மேலும் விரிவாக கூறுகையில் , ” இயல்புநிலையைக் காண்பிப்பதற்காக, இந்த  அரசு எங்கள் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைக்கின்றது, எல்லாவற்றிலும் அரசியல் செய்துவிட்டு தற்போது கல்வியிலும் அரசியலை நுழைக்கின்றனர்” என்றார்.

 

ஸ்ரீநாத் ராகவன் – காஷ்மீரின் வரலாறு குறித்த வீடியோ:  

 

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது முக்கியம், ஆனால் அவர்களின் உயிர்களுக்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள்?  வெகு நாட்களாக பள்ளிக்கு செல்லாத மாணவர்கள் தற்போது எவ்வாறு தேர்வு எழுதுவார்கள் என்ற கேள்வியையும் காஷ்மீர் மக்கள் முன்வைக்கின்றனர்.

கடந்த வாரங்களில், மொபைல் போன் தொலை தொடர்பு தடைகளை நீக்கியதில் இருந்து ஜம்மு- காஷ்மீரில் இதுவரை மூன்று பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு டிரக் டிரைவர், சத்தீஸ்கரில் இருந்து குடியேறிய தொழிலாளி, பஞ்சாபை சேர்ந்த ஆப்பிள் பழ வியாபாரி சரஞ்சீத் சிங் போன்ற மூவர் மத்திய அரசாங்கம் ஜம்மு- காஷ்மீரில் மொபைல் போன் தொலை தொடர்பு தடைகளை நீக்கியதில் இருந்து  பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு பலியானராகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநகரின் புச்ச்போரா பகுதியில் அமைந்துள்ள கிரீன் வேலி பள்ளியின் தலைவர்,  முகமது யூசுப் இது குறித்து தெரிவிக்கையில், ” நாங்கள் பள்ளிகளை தினம்தோறும் திறந்துவைத்துதான் இருக்கிறோம், ஆனால் பாதுகாப்பு காரணங்களால் பள்ளிகளுக்கு குழந்தைகள் வருவதில்லை, பள்ளியின் வாகன ஓட்டுனர் கூட அசாதரன சூழலை கருத்தில் கொண்டு குழந்தைகளைக் பள்ளிக்கு அழைத்து வரத்தயாராயில்லை,” என்று தெரிவித்தார். ஆகஸ்ட் 5ம்  முதல் ஆர்ப்பாட்டங்களின் மையமாக மாறிய சவுராவுக்கு அருகில் தான் இந்த புச்ச்போரா அமைந்துள்ளது.

தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள டால்பின் பப்ளிக் பள்ளியின் உரிமையாளர் பிலால் பாரூக் பாசிலி கூறுகையில், ” ஆகஸ்ட் 5 முதல் எந்த மாணவரும் பள்ளிக்கு வருவதில்லை, அரசாங்கம் தேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவை நாங்கள் மதிக்கின்றோம், ஆனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் கடமை” என்று  தெரிவித்தார்.

காஷ்மீரின் தனியார் பள்ளி சங்கத்தின் தலைவர், ஜி என் வர் கூறுகையில், ” கல்வி  எப்போதும் அரசியல் ரீதியாக நடுநிலையாக இருக்க வேண்டும், தேர்வு குறித்து அறிவிப்பதற்கு முன்பு நிர்வாகம் ஏன் பெற்றோரிடம் ஆலோசிக்கவில்லை, கலந்து ஆலோசிக்காமல் அவசரமாய் எடுத்த முடிவு”  என்றார்.

ஜம்மு- காஷ்மீர் பள்ளிக்கல்வி வாரியத் தலைவராக இருக்கும் வீணா பண்டிதா,  பெற்றோர் எழுப்பிய பாதுகாப்பு கவலைகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்கள், ஜே & கே நிர்வாக செய்தித் தொடர்பாளராக இருக்கும் ரோஹித் கன்சால் மௌனத்தை மட்டுமே பதிலாய் சொல்கிறார்.

லடாக் உட்பட காஷ்மீர் பிரிவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை 6.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பதாக காஷ்மீர் கல்வித் துறை பதிவுகள் காட்டுகின்றன.

பாடத்திட்டத்தில் தளர்வு ஏற்படுவதை அனுமதிக்க அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றாலும், அது தொடர்பாக ஒரு முடிவு பின்னர் கட்டத்தில் எடுக்கப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Showcasing normalcy jk announces exam dates for class 5 12 jammu kashmir administration