ஜம்மு காஷ்மீரில் `ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி பயங்கரவாதிகளால் துப்பாக்கியில் சுட்டு கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரைசிங் காஷ்மீர் பத்திரிக்கையின் ஆசிரியரான சுஜாத் புகாரி, ஸ்ரீநகரில் நடந்த இப்தார் விருந்தில் கலந்துகொள்ள தனது 2 பாதுகாவலர்களுடன் காரில் சென்றிருந்தார். விழாவை முடித்து விட்டு நேற்று(14.6.18) மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் 3பயங்கரவாதிகள் அவரின் காரை பின் தொடர்ந்துள்ளனர்.
அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்த உடன், காரை வழிமறித்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் சுஜாத் புகாரியின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தனர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பாதுகாவலர்களையும் பயங்கரவாதிகள் சுட்டனர். பின்பு மூவரும் இறந்து விட்டதாக எண்ணி பயங்கரவாதிகள் அங்கிருந்து சென்றனர்.
பின்னர், அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சில மணி நேர சிகிச்சைக்கு பின்பு சுஜாத் புகாரி மற்றும் அவரது 2 பாதுகாவலர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் குறித்து ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி கண்டனமும் இரங்கலும் தெரிவித்துள்ளார்.மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் பல நாட்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த துப்பாக்கிசூடு நிகழ்த்தப்பட்டதற்கான காரணம் சரியாக தெரியப்படவில்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொலை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ள பயங்கரவாதிகள் எந்த அமைப்பினை சேர்ந்தவர்கள் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை.