காஷ்மீரின் பிரச்சனைகளை நாடறிய செய்த சுஜாத் புகாரி யார்?

சுஜாத் புகாரியும் அவருடைய ரைசிங் காஷ்மீர் பத்திரிக்கையும் காஷ்மீரில் அமைதியை விரும்பும் சாதாரண மக்களின் ஒன்றுபட்ட குரலாக விளங்கினார்கள்

காஷ்மீரின் பிரச்சனைகளைப் பற்றி அதன் வேர் வரை சென்று அலசி ஆராய்ந்த ரைசிங் காஷ்மீர் பத்திரிக்கையின் ஆசிரியர் சுஜாத் புகாரி நேற்று தன்னுடைய அலுவலகத்திற்கு முன்பாக மூன்று தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன், அவருடைய பாதுகாவலர்கள் இருவரும் சுட்டு கொல்லப்பட்டார்கள்.
பத்திரிக்கையாளர் சுஜாத் புகாரி காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை

2000ம் ஆண்டு சுஜாத் புகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அவருக்கு பாதுகாவலர்களை நியமித்திருந்தது அரசாங்கம். தி இந்து பத்திரிக்கையில், ஜம்மு – காஷ்மீர் பிராந்திய பிரச்சனைகளைப் பற்றி தொடர்ந்து 15 வருடங்களுக்கும் மேலாக எழுதி வந்தவர். பின்னர் அவருடைய சொந்த பத்திரிக்கையான ரைசிங் காஷ்மீரை உருவாக்கி பத்துவருடங்களுக்கும் மேலாக காஷ்மீரின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பற்றி எழுதிவந்தவர். இரமலான் மாத நோன்பினை முன்னிட்டு மத்திய அரசு போர் மற்றும் தாக்குதல் நிறுத்த நடவடிக்கைகளை கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டு வந்துள்ளது. இதற்கு வரவேற்பினையும் ஆதரவினையும் தெரிவித்து கடந்தவாரம் தன்னுடைய பத்திரிக்கையில் எழுதியிருந்தார் சுஜாத் புகாரி.

யார் இந்த சுஜாத் புகாரி

ஒரு முறை பார்த்தால் அவரின் உயரமும், அவருடைய தெளிவான பேச்சும் உங்களை மெய்மறக்க வைத்துவிடும். எப்போதும் காதில் செல்போனை வைத்துக் கொண்டு கழுத்தை சாய்த்துக் கொண்டு பேசிக் கொண்டே இருப்பார். அவருடைய குழந்தைகள், அவர் எப்படி நடப்பார் என்று நடந்து காட்டும் போது அவருக்கும் அவருடைய குழந்தைகளுக்கும் அத்தனை பெரிய வித்தியாசம் தெரியாது. செல்போன் வரும் காலங்களுக்கு முன்னால், அவர் காலை எழுந்ததும் செய்யும் முதல் வேலை நியூயார்க் டைம்ஸ்ஸைய்யும், கார்டியனையும் படிப்பது தான். இன்று செல்போன் வந்த பின்பும் கூட, அவருடைய கைகள் பத்திரிக்கையின் பக்கங்களை திருப்புவதற்கு ஆர்வமுடன் இருக்கும். எதையும் சாதுர்யமாக, புன்னகையால் கடந்து செல்லும் அவருடைய பேச்சில் உங்களின் வாக்குவாதம் தோற்றுவிடும் என்பது உண்மை. காஷ்மீரின் குளிருக்கும், டெல்லியின் தகிக்கும் வெயிலுக்கும் மத்தியிலும் கூட இவரின் புன்னகையில் மாற்றம் இருந்ததேயில்லை.

அவருடைய கால்கள் என்னவோ காஷ்மீரில் இருந்தாலும் அவரின் எண்ண ஓட்டங்கள் பல்வேறு தரப்பட்ட மக்களின் மனதின் வழியாக பயணித்து தன்னுடைய சொந்த முடிவினை எடுக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார். ஜம்மு காஷ்மீருக்கு உள்ளும் வெளியும் அதிகமாக பயணித்த இவரின் எழுத்துகள் இன்று பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடங்களாக இருக்கின்றன. தி இந்துவுடனான இவருடைய பயணம், இவரின் தனித்தன்மைகளை நாடறியவைத்தது. இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

தி இந்துவுடனான சுஜாத் புகாரி பயணம்

தி இந்து நாளிதழை அவர் எப்போதும் ஆசானகவே நினைத்துக் கொண்டவர். ”ஏனென்றால் சென்னையின் அண்ணாசாலையில் இருக்கும் தி இந்து, இந்தியாவின் கீரிடத்தில் இருக்கும் பாராமுல்லாவிலும், இன்ன பிற பகுதிகளிலும் நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி அதிக அக்கறை கொண்டிருப்பது தான்” என்பார். காஷ்மீரில் நடக்கும் பிரச்சனைகள் பற்றி தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கும் மத்தியில் உண்மையாக எழுதிவந்தார். ஹரிஷ் கார், தி இந்துவில் சுஜாத் புகாரியை அறிமுகப்படுத்திய பத்திரிக்கையாளர் “காஷ்மீர் நிலைப் பற்றி எப்போதும் அறிந்து கொள்ள நான் அணுகும் முதல் நபர் புகாரியாகத்தான் இருப்பார். 1994ல் அவரை நான் சந்தித்தேன், பின்பு அவருடைய பணிகள் தி இந்துவில் தொடங்கியது” என்று கூறினார்.

சுஜாத் புகாரி பற்றி சச்சிதானந்த மூர்த்தி

சுஜாத் புகாரி பற்றி தீ வீக் பத்திரிக்கையின் ஆசிரியர் சச்சிதானந்த மூர்த்தி கூறுகையில் “ஒரு பிரச்சனையைப் பற்றி பல தரப்பட்ட கருத்துகள் வரும் போது, அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து, பிரச்சனையின் ஆரம்பத்தினை ஆழ்ந்து கவனித்து எழுதுபவர். அனைத்திலும் வேறு கோணத்தில் பிரச்சனையை அணுகும் பண்புடையவர். அதனால் தான் அவர் ஆகச் சிறந்த ஊடகவியலாளாராக போற்றப்பட்டார். மிக சமீபத்தில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, கொஞ்சம் ஓய்வெடுக்க நாங்கள் வற்புறுத்தியும், ரைசிங் காஷ்மீர் எந்த ஒரு இடையூமின்றி மக்களிடம் செல்ல வேண்டும். அதற்கு நான் காஷ்மீரில் தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு கிளம்பியவர்” என்று தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

ரைசிங் காஷ்மீர்

இந்துவில் இருந்து வெளியேறிய பின்னர் தன்னுடைய சொந்த பத்திரிக்கையான ரைசிங் காஷ்மீரினை தொடங்கினார். பத்திரிக்கையினை தொடங்கிய போது, நேரங்காலம் தெரியாமல் வேலை செய்து கொண்டிருந்தவர். பிரஸ் காலனியில் இருக்கும் அவருடைய அலுவலகத்தில் இருந்து கொண்டு நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களிடம் காஷ்மீரில் நடப்பது என்பதை அறிந்து கொண்டு நள்ளிரவில் தான் வீடு திரும்புவார். அவருடைய சகோதரர் பிஜேபி – பிடிபி கூட்டணியில் அமைந்துள்ள காஷ்மீர் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கின்ற படத்திலும் உண்மைக்கு புறம்பாக எதையும் எழுதாதவர்.

காஷ்மீரின் அமைதி

காஷ்மீரில் அமைதியை நிலைநிறுத்த அரசாங்கம் என்ன முடிவு செய்தாலும் அதை அமோதித்து வரவேற்கும் பண்பினை உடையவர். காஷ்மீரில் அமைதியை விரும்பும் சாதாரண மக்களின் ஒன்றுபட்ட குரலாக விளங்கியவர் சுஜாத் புகாரியும் அவருடைய ரைசிங் காஷ்மீர் பத்திரிக்கையும். காஷ்மீர் பற்றி மற்றவர்களுக்கு இருக்கும் நிலைப்பாட்டில் இருந்து வேறுபட்ட கருத்தினை கொண்டிருப்பதற்காக அவர் எப்போதும் மகிழ்ச்சி அடைவார். 2011ல், காஷ்மீர் இலக்கிய விழா ஒன்றினை நடத்த வேண்டும் என்று விரும்பியவர் அவர். ஆனால் அவருடன் பணிபுரிந்த மற்ற பத்திரிக்கையாளர்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தன. இந்தியா தற்போது அறிவித்திருக்கும் இரமலான் போர் நிறுத்த நடவடிக்கைகளை வரவேற்று எழுதியவர். பல்வேறு காரணங்கள் அவரை அவருடைய இறுதி நிமிடங்களுக்கு அழைத்துச் சென்றது. ஆனால், ஊடகவியல் பணியை நேர்மையுடனும் உண்மையுடனும் தொடங்கி பல்வேறு ஆண்டுகளாக உழைத்தவற்கு அஞ்சலிகள் பல.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close