நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பிய பெண்ணிடம் இருந்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மைக்கை பறித்த போது அந்த பெண்ணின் துப்பட்டாவும் கையோடு வந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவிடம் பெண் ஒருவர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் அவர் ஆவேசமடைந்தார். வாயை மூடிக்கொண்டு கீழே உட்கார் என்று சித்தராமையா கோபத்தில் கத்திய போதும், அந்த பெண் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சித்தராமையா, பெண்ணின் கையிலிருந்து மைக்கை பிடுங்கினார். அப்போது, சித்தராமையாவின் கை, பெண்ணின் துப்பட்டாவையும் சேர்த்து இழுத்தது. அதனால், பெண் அணிந்திருந்த துப்பட்டா பாதி கீழே சரிந்தது. சித்தராமையா மைக்கைப் பிடிங்கிய பிறகும், பெண் ஆவேசமாக கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்.
பின்னர், அங்கே கூடியிருந்தவர்கள் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி உட்காரவைத்தனர். இந்த விவகாரம் முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது. சித்தராமையாவின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன. குறிப்பாக, சித்தராமையாவின் செயலை பா.ஜ.க கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
இதுகுறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 'சித்தராமையா செய்தது கிரிமினல் குற்றம். காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்துப் பெண்களைத் தவிர வேறு யாருக்கும் மரியாதை இல்லை. இந்த சம்பவம் நடந்த போது, ஒருவேளை ராகுல் காந்தி அங்கு இருந்திருந்தால் என்ன செய்ய செய்திருப்பார் என்பதை ராகுல்காந்தியே தெரிவிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.