கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, மக்கள் சமூக நீதி அமைப்பினர் கொண்டு வந்த பெரியார் உருவம் தாங்கிய செங்கோலை வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, சித்தராமையா முதல்வரானார். டி.கே. சிவக்குமார் துணை முதல்வரானார்.
இந்த சூழலில் மதுரையை சேர்ந்த மக்கள் சமூகநீதி பேரவை சார்பில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவிக்க முடிவு செய்தனர்.
கர்நாடகா முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றதும் அம்மாநில பள்ளிப் பாடப்புத்தகங்களில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த வீரசாவர்க்கரின் வாழ்க்கை குறிப்புகளை கர்நாக அரசு நீக்கியது. 75% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தராமையா அறிவித்தார். இந்த நடவடிக்கைகளைப் பாராட்டி கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க கடந்த சனிக்கிழமை மாலை பெங்களூருவில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்திற்கு மதுரையைச் சேர்ந்த மக்கள் சமூகநீதி பேரவையைச் சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர்.
மக்கள் சமூகநீதி பேரவை நிர்வாகி மனோகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர், தங்க முலாம் பூசப்பட்ட 4 அடி உயரம் உடையெ பெரியார் உருவம் தாங்கிய சமூகநீதி செங்கோல் மற்றும் நினைவு பரிசுகளுடன் சித்தராமையாவை சந்தித்தனர்.
அப்போது முதலமைச்சர் சித்தராமையா, மக்கள் சமூக நீதி அமைப்பினர் கொண்டு வந்த செங்கோலை வாங்க மறுத்துவிட்டார். பிரதமர் மோடிக்கு ஆதீனங்கள் செங்கோல் கொடுத்த போது, காங்கிரஸ் அதை எதிர்த்தது. இப்போது நானே அதை வாங்கினால் நன்றாக இருக்காது. செங்கோல் என்பது சர்வாதிகாரத்திற்கு உரியது. சமூகநீதிக்கு எதிரானது. பெரியாரின் கொள்கைகளுக்கு எதிரானது. எனவே பெரியார் செங்காலை பெற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் சமூகநீதி பேரவையினர், மோடிக்கு வழங்கப்பட்ட செங்கோல் மதச்சார்புடையது. இது மதச்சார்பில்லாதது என்று விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும் முதலமைச்சர் சித்தராமையா அதனை ஏற்கவில்லை. அதே நேரத்தில், மக்கள் சமூகநீதி பேரவையினர் கொண்டு சென்ற பெரியார் உருவம் தாங்கிய படங்கள் மற்றும் பொன்னாடைகளை சித்தராமையாக பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மிகப்பெரிய அளவில் விழா நடத்தி, செங்கோலை சமூக நீதி தூணாக மாற்றம் செய்து வழங்குவதாக முதலைச்சரிடம் சித்தராமையாவிடம் தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”