Advertisment

ஒரே நாடு, ஒரே தேர்தல்: தேசிய கட்சிகளுக்கு சாதகமா? திமுக.வும் எதிர்ப்பது ஏன்?

ஒரே நாடு ஒரே தேர்தல் என நாடாளுமன்றத் தேர்தலையும், சட்டமன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவதில் தேசியக் கட்சிகளுக்கு சில சாதகமான அம்சங்கள் இருக்கின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Loksabha election results 2019

Loksabha election results 2019

ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் அதிமுக.வைப் போலவே திமுக.வும் எதிர்ப்பதாக வரும் தகவல்கள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஏன் எதிர்க்கிறது திமுக?

Advertisment

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற முறையை அமல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலையும், அனைத்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களையும் இணைத்து நடத்துவதுதான் இந்தத் திட்டம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் முதல் கட்டமாக வருகிற 2021-ம் ஆண்டு வரை நடைபெற வேண்டிய மாநில சட்டமன்றத் தேர்தல்களையும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் நடத்த ஆலோசிக்கப்படுகிறது. அதன்பிறகு நடைபெற வேண்டிய சட்டமன்றத் தேர்தல்களை 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் நடத்த திட்டமிடுகிறார்கள். இது அமுலானால் 2024 முதல் நாடாளுமன்றத் தேர்தலும், அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுவிடும்.

ஆனால் 2021 வரை ஆளும் வாய்ப்பை பெற்றுள்ள மாநில அரசுகள் பலவும் 2019-லேயே சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. காரணம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆளும் வாய்ப்பை தியாகம் செய்துவிட்டு மீண்டும் ஆட்சிக்கும் வரும் நம்பிக்கை பல கட்சிகளுக்கு இல்லை.

தமிழ்நாட்டை ஆளும் அதிமுக.வும் 2021 வரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியை நகர்த்திவிடுவதில் மும்முரமாக இருக்கிறது. எனவே மத்திய அரசின்,‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

ஜூலை 29-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய சட்ட ஆணையத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார்கள். நாடு முழுவதும் 7 தேசியக் கட்சிகள் மற்றும் 59 மாநிலக் கட்சிகளிடம் இது தொடர்பாக சட்ட ஆணையம் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்துகிறது.

டெல்லியில் இன்றும், நாளையும் (ஜூலை 7,8) நடைபெறும் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மாநில சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க இருக்கிறார்கள்.

2021 வரை தங்கள் அரசு செயல்பட வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்த இருக்கும் அவர்கள், 2024 முதல் வேண்டுமானால் மேற்படி திட்டத்தை அமுல்படுத்த தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்கிற கருத்தை வெளிப்படுத்த இருக்கிறார்கள். அமைச்சர் ஜெயகுமார் இதே கருத்தை மீடியாவிடம் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஆச்சர்யப்படத்தக்க வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை திமுக.வும் எதிர்ப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன. திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா நாளை (ஜூலை 8) மத்திய சட்ட ஆணையம் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு திமுக.வின் நிலையை விளக்க இருப்பதாக தெரிகிறது.

2015-ல் இதே திட்டத்தை ஆதரித்து நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அறிக்கை அளித்த அதிமுக , இப்போது தங்கள் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்வதற்காக அந்தத் திட்டத்தை எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

விரைவிலேயே தமிழகத்தில் தேர்தல் வரவேண்டும் என விரும்புகிற திமுக இதை ஏன் எதிர்க்க வேண்டும்? அப்படியானால் 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருவதை திமுக.வும் எதிர்க்கிறதா? இதில் திமுக.வுக்கு என்ன லாபம்? என பல கேள்விகள் எழுகின்றன.

திமுக தலைமைக்கு நெருக்கமான சிலரிடம் இது குறித்துக் கேட்டபோது, ‘தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை கொண்டு வரவேண்டும் என்பது புதிதாக கட்சி தொடங்கவிருக்கும் ரஜினிகாந்தின் விருப்பம்! மத்திய அரசு அதற்காகவே இந்த முயற்சியை எடுக்கலாம்!

எங்களைப் பொறுத்தவரை, அதிமுக அரசு 2019 வரைகூட நீடிக்ககூடாது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கவிழ்ந்து, சட்டமன்றத் தேர்தல் வரும் என நினைக்கிறோம். தவிர, நாடாளுமன்றத் தேர்தலையும், சட்டமன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவதில் தேசியக் கட்சிகளுக்கு சில சாதகமான அம்சங்கள் இருக்கின்றன. குறிப்பாக கூட்டணி பேரத்தில் இரு பெரிய தேசியக் கட்சிகளின் கை ஓங்கும். இதற்காகவே நாங்கள் இதை எதிர்க்க வேண்டியிருக்கிறது. தவிர, நடைமுறையில் மேற்படி திட்டம் சாத்தியம் இல்லை’ என்கிறார்கள் திமுக தரப்பில்!

பெரும்பாலான கட்சிகள் எதிர்க்கும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நிறைவேறுவது சந்தேகம்தான்!

 

Dmk Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment