Sister Abhaya murder case verdict: பாதிரியார் தாமஸ் கோட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கத்தோலிக்க கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என்று அறிவித்தது திருவனந்தபுரம் சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம்.
28 வருடங்களுக்கு முன்பு, 1992ம் ஆண்டு, 19 வயதான கத்தோலிக்க கன்னியாஸ்திரி கேரள மாநிலம் கோட்டயத்தில் அமைந்திருக்கும் புனித பியூஸ் கான்வெண்ட் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். மார்ச் 27, 1992ம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் உள்ளூர் காவல்துறை மற்றும் மாநில குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்த வழக்கை விசாரணை செய்து அபாயாவின் மரணம் தற்கொலை என்று அறிக்கை சமர்பித்தது. ஆனால் பாதிரியார் புத்தென்புரெக்கலின் சட்ட போராட்டத்திற்கு பிறகு மார்ச் 29, 1993ம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது.
2008ம் ஆண்டு கோட்டூர், பூத்திரிகையில் மற்றும் செபி ஆகியோரை கொலை வழக்கில் கைது செய்தது சி.பி.ஐ. கேரள உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞர், மார்ச் 27ம் தேதி அன்று அதிகாலையில் அபயா, கன்னியாஸ்திரி செபி மற்றும் பாதிரியார்கள் கோட்டூர் மற்றும் பூத்திரிகையுடன் சமையலறையில், உறவில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது வெளியே தெரிந்தால் ஆபத்து என்று உணர்ந்த செபி கோடாரியை கொண்டு அபயாவை தாக்கி, மூவரும் அபயா உயிருடன் இருக்கும் போதே அவரை அங்கிருந்த கிணற்றில் தள்ளிவிட்டது விசாரணையில் தெரிய வந்தது. செபி மற்றும் கோட்டூர் மீது கொலை, ஆதாரங்களை அழித்தல், சதி திட்டம் தீட்டுதல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு நாளை தண்டனை வழங்க உள்ளது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil