ஜே.டி(எஸ்) எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார்களை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) செவ்வாய்க்கிழமை ஆஜராக சம்மன் அளித்தும் அதிகாரிகள் முன் ஆஜராகாததால் லுக்அவுட் நோட்டீஸை வெளியிட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: SIT issues lookout circular against Prajwal Revanna in ‘sexual abuse’ case
புதனன்று, ஜே.டி(எஸ்) நிறுவனரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவ கவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராக ஏழு நாட்கள் அவகாசம் கோரினார். இந்தநிலையில், பெண் ஒருவரின் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெர்மனியில் இருப்பதாகக் கூறப்படும் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டிற்குள் நுழைந்தவுடன் அவரைத் தடுத்து வைக்க அனைத்து குடிவரவு மையங்களிலும் லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் உறுதிப்படுத்தினார். "லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடுவது ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை மற்றும் நாங்கள் அதைச் செய்துள்ளோம்" என்றும் அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தின் கடிதத்தைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
பிரஜ்வல் ரேவண்ணா சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பல வெளிப்படையான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.
ஹசன் மக்களவைத் தொகுதியில் 2,967 கோப்புகள் கொண்ட பென் டிரைவ்கள் வைரலானதை அடுத்து, ஏப்ரல் 28ஆம் தேதி ஹொலேநரசிபுரா நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 47 வயதான பெண் ஒருவர் தன்னை பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ஹோலேநரசிபுரா எம்.எல்.ஏ எச்.டி ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்தார்.
பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் எச்.டி. ரேவண்ணா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (பாலியல் துன்புறுத்தல்), 354 (டி) (பின்தொடர்தல்), 506 (கிரிமினல் மிரட்டல்) மற்றும் 509 (எந்தப் பெண்ணையும் அவமதிக்கும் நோக்கம்) ஆகிய ஐ.பி.சி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது முதல் எதிர்வினையில், பிரஜ்வல் தனது எக்ஸ் பக்கத்தில், “விசாரணையில் கலந்து கொள்ள நான் பெங்களூரில் இல்லாததால், எனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு சி.ஐ.டி.க்கு தகவல் தெரிவித்தேன். விரைவில் உண்மை வெல்லும்” என்று பதிவிட்டுள்ளார்.
அதே நாளில், பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். இராஜதந்திர மற்றும் போலீஸ் வழிகளைப் பயன்படுத்தி பிரஜ்வல் நாடு திரும்புவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கூறினார்.
எச்.டி ரேவண்ணா குற்றச்சாட்டுகளை ‘சதி’ என்றும், “4-5 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், என்ன மாதிரியான சதி நடக்கிறது என்பது எனக்குத் தெரியும்” என்றும் கூறினார்.
குற்றச்சாட்டுகளின் வெளிச்சத்தில் செவ்வாய்க்கிழமை பிரஜ்வாலை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்த மதச்சார்பற்ற ஜனதா தளம், சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை பிரஜ்வல் இடைநீக்கம் செய்யப்படுவார் என்று கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“