உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பாரதிய ஜனதா முனைப்பு காட்டி வரும் நிலையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய பிரதேச அரசு, அண்டைநாடான இலங்கையில், சீதைக்கு கோயில் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மத்தியபிரதேச மாநிலத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்டை நாடான இலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோயில் கட்ட அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோயிலின் மாதிரி திட்டம், தேவைப்படும் நிதி உள்ளிட்ட விபரங்களை உடனடியாக தயாரித்து வழங்குமாறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார்.
சீதை கோயில் கட்டுமான பணிகளை, மத்திய பிரதேச அரசு, இலங்கை அரசு மற்றும் மகாபோதி சொசைட்டி இணைந்து மேற்கொள்ள உள்ளது.
கோயிலின் மாதிரி உள்ளிட்ட விபரங்களை உடனே தயாரிக்குமாறும், அதற்கு தேவைப்படும் நிதியை, இந்த நிதியாண்டிலேயே ஒதுக்க முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார்.
சீதை கோயில் விவகாரம் தொடர்பாக முதல்வர் கமல்நாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மகாபோதி சொசைட்டி பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாது, சாஞ்சி பகுதியில் புத்தர் அருங்காட்சியகம் அமைப்பது, சர்வதேச தரத்திலான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை அமைப்பது குறித்து அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டன. சாஞ்சி மேம்பாட்டு வளர்ச்சிக்கு,ஜப்பான் மற்றும் பல்வேறு நாடுகளிடமிருந்து நிதியுதவி பெறவும் இதில் முடிவு செய்யப்பட்டது.
மத்திய பிரதேச மாநில மக்கள் தொடர்புதுறை அமைச்சர் பிசி சர்மா, சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து சீதை கோயில் கட்ட ஏதுவான இடங்களை பார்வையிட்டார். இலங்கை மற்றும் பல்வேறுநாடுகளை சேர்ந்த புத்தகுருமார்கள் அதிகளவில் சாஞ்சிக்கு வருவதால், விமான சேவையை, சாஞ்சி பகுதிக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சாஞ்சிக்கு வருபவர்கள், இலங்கையில் கட்டப்படும் சீதை கோயிலுக்கும் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இலங்கையில் சீதை கோயில் கட்டும் விவகாரம், 2012ம் ஆண்டிலேயே அப்போதைய பாரதிய ஜனதா முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் காலத்தில் திட்டமிடப்பட்டது. அப்போதைய இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, சாஞ்சிக்கு வந்து, சர்வதேச புத்தர் பல்கலைகழகம் கட்ட அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.