Sitaram Yechury and D.Raja Detained at Srinagar Airport:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா இருவரும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து அந்த மாநிலம் முழுவதுமாக பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் அடைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,இந்திய கம்யூனிஸ் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகிய இருவரும், ஜம்மு காஷ்மீரில் உள்ள தங்கள் கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்களை சந்திப்பதற்காக விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்றனர். விமான நிலையத்தில் அவர்கள் இருவரும் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பாஜக தனது சர்வாதிகார முகத்தை காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு எழுதிய கடிதத்தில், தான் வெள்ளிக்கிழமை ஸ்ரீநகருக்கு வந்து அங்குள்ள தனது கட்சியைச் சேர்ந்தவர்களையும், கட்சி எம்.எல்.ஏ.வையும் சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்ற சீதாராம் யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா இருவரும் விமான நிலையத்தில் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சீதாராம் யெச்சூரி தனடு டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “டி.ராஜாவும் நானும் எங்களுடைய கட்சியினரை சந்திப்பதற்கு ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இப்படி விமான நிலையத்தில் தடுத்துவைப்பது எங்களுடைய ஜனநாயக உரிமைகளை மீறும் செயல். எங்கள் அடிப்படை சுதந்திரத்தை மத்திய அரசு நசுக்குவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், காஷ்மீர் மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஞாயிற்றுக்கிழமையிலிருந்து, தாரிகாமி மற்றும் கட்சியைச் சேர்ந்த மற்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டோம். நாங்கள் தாரிகாமிக்கு இந்த குறிப்பை எழுதுகிறோம். அவர் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டறிய நாங்கள் அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறித்து, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாரம் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜா அவர்களும் ஜம்மு-காஷ்மீருக்கு சிபிஐ(எம்) MLA தாரிகாமியையும் ,மாநிலத்து மக்களையும் சந்திக்க சென்றார்கள். தோழர் தாரிகாமி எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்.
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இரண்டு தலைவர்களையும் ராணுவம் கைது செய்து வைத்திருக்கிறது. மக்களை சந்திக்க கூடாதா? சிறைப்படுத்தப்பட்டுள்ள தலைவர்களை சந்திக்க கூடாதா? கூடாது என்கிறது சர்வாதிகார மோடி அரசு.
சர்வாதிகாரம் வென்றதாக சரித்திரமில்லை!!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகிய இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
முன்னதாக, நேற்று ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமான நிலைத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.