By: WebDesk
Updated: October 12, 2020, 04:45:19 PM
அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் (கெஜடட் மற்றும் கெஜடட் அல்லாத ஊழியர்கள் ) 2021 மார்ச் 31 வரை ரூபே பிரீபெய்டு கார்டு மூலம் ரூ. 10,000 வட்டியில்லா முன்பணமாக பெறலாம் என்று நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சரக்கு மற்றும் சேவை வரி குழுமத்தின் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், காணொலிக் காட்சி வாயிலாக இன்று நடைபெறவுள்ளது. மாநிலங்களுக்கான இழப்பீடு குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ” எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வட்டியில்லா முன்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ரூபே கார்டு மூலம் வழங்கப்படும் இந்த முன்தொகை பணத்தை நிதியாண்டின் இறுதிவரை மத்திய அரசு ஊழியர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
இந்த முன்தொகையை 10 மாத கால ( ரூ. 10,000 என்ற அடிப்படையில்) தவணையாக திரும்ப செலுத்தலாம். இத்திட்டத்திற்காக 4,000 கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
7-வது ஊதியக்குழுவில் பண்டிகை கால முன்பணம் குறித்தபரிந்துரை இல்லையென்றாலும், பொருளாதாரச் சூழல் கருதி மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும், கொரோனா தொற்று பிரச்சனையால், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை கால பயண சலுகைக்கு பதிலாக, பயண கட்டணத்தொகைக்கு மும்மடங்கு மதிப்புள்ள பொருட்களை வாங்கிக் கொள்ளும் (LTC Cash Transfer) ரொக்க ரசீதுகள் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார். இந்த ரொக்க ரசீதுகளை பயன்படுத்தி, உணவு சாராத ஜிஎஸ்டி பொருட்களை அரசு ஊழியர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil