ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.பி. நரமல்லி சிவபிரசாத், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி போல வேடமிட்டு, பாராளுமன்றம் முன்பு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
தங்களது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசுக்கு ஆந்திர அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்தக் கோரிக்கையை இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால், ஆந்திராவை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி தனது எதிர்ப்பை பதிவு செய்தது.
அத்துடன் மாநில சிறப்பு அந்தஸ்துக்காக பாராளுமன்றத்தில் தெலுங்குதேசம் கட்சி எம்பிக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக எம்.பி. சிவபிரசாத் விதவிதமான வேடங்கள் அணிந்து வந்து பாராளுமன்ற வளாகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார். நாரதமுனி, பள்ளி மாணவர், ஹிட்லர் என இவரின் வேடங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் நேற்று பாராளுமன்ற வளாகத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வேடத்தில் வந்த சிவபிரசாத் அனைவரின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தார். மஞ்சள் துண்டு, சக்கர நாற்காலி, கருப்பு கண்ணாடி என அச்சு அசல் கருணாநிதி போலவே உருமாறி, சக்கர நாற்காலியில் அமர்ந்து கையசைத்துக் கொண்டே போனார்.
அடிப்படையில், சிவபிரசாத் ஒரு சினிமா நடிகர். இதுவரை 27 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். பின்னாளில், தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த சிவபிரசாத், 2009ம் ஆண்டு ஆந்திராவின் சித்தூர் தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வானார்.
ஆந்திர மாநிலத்திற்கு எந்தவொரு தேவையாக இருந்தாலும், சிவபிரசாத்தின் போராட்ட ஸ்டைலே இப்படி விதவிதமாக கெட்டப் போடுவது தானாம்.
கடந்த 2013ம் ஆண்டு, ஆந்திராவில் நடந்து பொதுக் கூட்டம் ஒன்றில், 'அந்நியன்' விக்ரம் வேடத்தில் வந்து அந்த கூட்டத்தையே கதி கலங்க வைத்தவர் சிவபிரசாத்.
தற்போது, கலைஞர் கருணாநிதி வேடமிட்டு அசத்தியுள்ளார்.