இன்று தொடர் செய்திகளாகிவரும் சுகேஷ் சந்திர சேகர் 17ஆம் வயதிலே ஆள் மாறாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவர். இவர் 2006ஆம் ஆண்டு 10 வகுப்பு படிப்பை பாதியில் விட்டார்.
தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முதல் உள்ளூர்வாசிகள் வரை தனக்கு தெரியும் என்றார்.
அதுமட்டுமின்றி பல துணிச்சலான லஞ்ச நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார்.
இது மட்டுமின்றி மிரட்டி பணம் பறிக்கும் தொழிலும் நடத்திவந்துள்ளா். இந்நிலையில்தான் அதிமுக இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக சிக்கி 2017ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது இவரிடம் போலீசார், அமலாக்கத்துறை அதிகாரிகள் எனப் பலரும் விசாரணை நடத்திவருகின்றனர். இவர் மீது 30க்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர்.கள் பதியப்பட்டுள்ளன.
இதில் தொடர்புடைய சில வழக்குகளில் பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்டவர்களும் ஆஜராகி வருகின்றனர்.
இளமைக் கால சொகுசு வாழ்க்கை
சுகேஷ் சந்திர கார் மற்றும் பைக் ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்டவர். இவர் 2007ஆம் ஆண்டு முதன் முதலில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
அப்போது, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி மகனுடனான நட்பைக் குறி சுப்பிமணி என்பரை ரூ.1.14 கோடிகள் பெற்று ஏமாற்றியுள்ளார்.
இந்த நிலையில் சுகேஷ் தொடர்புடைய வழக்கில் இருந்து பிஎம்டபிள்யூ, நிசான், டொயோட்டா கரோலா, ஹோண்டா சிட்டி, ஹோண்டா அக்கார்டு, 12 உயர் ரக கைக்கடிகாரங்கள், ரூ.3.40 லட்சம் மதிப்புள்ள 6 செல்போன்கள், 50 இன்ச் எல்சிடி தொலைக்காட்சிப் பெட்டி, தங்க ஆபரணங்கள், ஆடம்பர உடைகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
தனது ஆரம்ப நாள்களிலே தமிழக அரசியல் புள்ளிகள் மற்றும் தொழிலதிபர்களிடம் சுகேஷ் சந்திரா வேலையை காட்டியுள்ளார்.
தனது பள்ளி நாள்களில் சுகேஷ் சந்திர சேகருக்கு விரும்பியது கிடைக்கவில்லை. அவர் பெங்களூருவில் உள்ள ஒரு பெரிய பள்ளியில் கல்வி பயின்றுள்ளார்.
அப்போது அவருடன் படித்த மாணவர்கள் மிக மிக செல்வந்தர்கள். அவர்கள் விதவிதமான கார்களில் வலம்வந்துள்ளனர். இது சுகேஷ் சந்திர சேகரால் முடியவில்லை.
ஏனெனில் சுகேஷ் சந்திர சேகரின் தந்தை ஒரு அரசு ஒப்பந்ததாரர் ஆக இருந்துள்ளார். மேலும் ஒரு ஆட்டோமொபைல் விற்பனை கடையும் நடத்திவந்துள்ளார்.
இதனால் தனது தில்லு முல்லு விளையாட்டுகளை சுகேஷ் சந்திர சேகர் பள்ளி நாள்களிலே ஆரம்பித்துவிட்டார். இந்த நிலையில் அதிமுக இரட்டை இலை விவகாரம் சுகேஷ் சந்திர சேகரிடம் சென்றுள்ளது.
அப்போது, வி.கே. சசிகலா, டிடிவி தினகரன் அறிமுகம் கிடைத்தது என்றும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி சுகேஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் அவர் சிறைக்கு செல்வதும், பிணையில் வெளிவருவதுமாக இருந்துள்ளார்.
அப்போது இவருக்கு லீனா மரியா பால் என்பவர் அறிமுகமாகியுள்ளார். பின்னாள்களில் இருவரும் ஜோடியாக வலம்வந்துள்ளனர். குற்றச் செயல்களிலும் ஜோடியாக ஈடுபட்டுள்ளனர்.
2011-ல் சுகேஷ் கைது செய்யப்பட்டபோது எடியூரப்பாவை தெரியு்ம் என்பதுபோல் காட்டிக்கொண்டுள்ளார். இதற்கு லீனா மரியா உதவி செய்துள்ளார்.
இந்த நிலையில், 2012இல் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பை விளம்பர படத்தில் நடிக்க வைப்பதாக கூறி கொச்சியை பூர்விகமாக கொண்டு பெங்களூரு ஜவுளிக் கடை அதிபர் ஒருவரிடம் ரூ.20 லட்சம் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரால் சுகேஷால் பெங்களூருவில் இருந்து வெளியேற முடியவில்லை. மேலும், 2007 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் சுகேஷின் பெற்றோர் சந்திர சேகர்-மாலா தம்பதி மீதும் மோசடி வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் 2013ஆம் ஆண்டு சுகேஷ் கொல்கத்தாவிலும், லீனா டெல்லியிலும் மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன், கர்நாடகா அரசின் நாப்கின் ஒப்பந்தம் ரூ.132 கோடிக்கு நடைபெறவுள்ளது என சென்னை தம்பதியை ஏமாற்றி ரூ.19 கோடியை முழுங்கிவிட்டனர்.
சென்னையை சேர்ந்த அந்த தொழிலதிபர் கனரா வங்கியில் கடன் பெற்று, சுகேஷ் கூறிய ஐஏஎஸ் அலுவலர் என்பவரின் பெயருக்கு ரூ.19 கோடி அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து ரூ.200 கோடி மோசடி ஒன்றில் சிக்கினார். இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்ட சுகேஷ், சிறை அதிகாரிகளுக்கு மாதந்தோறும் கிட்டத்தட்ட ரூ.1.50 கோடி வரை லஞ்சம் கொடுத்துள்ளார்.
இதில் 82 சிறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள பள்ளியில் படித்ததால் சுகேஷிற்கு தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி வட இந்திய மொழிகளிலும் சரளமாக பேசுவார்.
மேலும் எத்தனை கடுமையான கேள்வி கேட்டாலும் மென்மையாக பதில் அளிப்பாராம். இது தொடர்பாக பேசிய தமிழக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், “சுகேஷ் ஒரு குற்றவாளி என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அவரது பேச்சு மற்றும் செயல்கள் அவ்வாறு இருக்கும்” என்றார்.
ஆனால் சுகேஷ் சந்திர சேகர், கோழிப்பண்ணையாளர்கள், உள்ளாடை உற்பத்தியாளர்கள், பிரஷர் குக்கர் தயாரிப்பாளர்கள், வங்கி அதிகாரிகள், பார்க்கிங் சிஸ்டம் தயாரிப்பாளர்கள், சமையலறை உபகரணங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் உலர் பழங்கள் பேக்கேஜிங் நிறுவனம் உட்பட 100க்கும் மேற்பட்டோரை அரசு ஒப்பந்தங்களுக்கு இடைத்தரகர் எனக் கூறி மோசடி செய்துள்ளார்.
சுகேஷிற்கு சென்னையில் ஒரு பங்களா உள்ளது. இது குறித்து பேசிய மூத்த காவல் அதிகாரி, “என் விசாரணைக்காக பல இடங்களுக்கு சென்றுள்ளேன். ஆனால் என்னால் இதை நம்ப முடியவில்லை.
ஒரு அரண்மனையை மிக செலவழித்து வடிவமைத்துள்ளார். கட்டடத்தில் பயன்படுத்தப்பட்ட லைட்கள் மற்றும் கண்ணாடிகளின் விலை லகரங்களில் இருக்கும்.
அரண்மனைக்குள் செம்பு, வெள்ளி உள்ளிட்ட சிலைகளும் உள்ளன. கடந்த காலங்களில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரனாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மருமகனாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு போன்ற பல அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் மகனாகவும், சுகேஷ் வேடமிட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் தமிழக நிதியமைச்சர் கே.அன்பழகன், கர்நாடக முன்னாள் அமைச்சர் கருணாகர ரெட்டி, கர்நாடக முன்னாள் தலைமைச் செயலாளர் சுதாகர் ராவ், ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மருமகன் ஆகிய வேடங்களும் அடங்கும்.
இது குறித்து பேசிய தமிழக மூத்த காவல் அதிகாரி ஒருவர், “சுகேஷிடம் தனித்திறமை உண்டு. அவர் ஒருபோதும் கடினமாக உழைக்க தேவையில்லை. அவரின் உடல் மொழி, பேச்சுஆகியவை எதிராளியை நம்ப வைக்கும்.
அவர் ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் குறித்து நன்கு அறிந்து வைத்திருந்தார். நீதித்துறை குறித்த ஆழமான புரிதலும் அவருக்கு உண்டு. அவரை ஒரு ஏமாற்றுக்காரர் என்று வெறுமனே கூறிவிட முடியாது. அவர் நாடு எவ்வாறு செயல்படுகிறது என்பதை நன்கு அறிந்தவர்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“