நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கூறி தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. பணிகள் நடைபெறாமல் உள்ளன. எதிர்கட்சிகள் சஸ்பெண்ட், போராட்டம் என பரபரப்பாக உள்ளது.
இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சேனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்பிக்கள் எனப் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மக்களவை உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவரை ‘ராஷ்டிரபத்தினி’ எனக் குறிப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்தனர்.
நாடாளுமன்றத்தில் இதுகுறித்து ஸ்மிருதி இராணி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் பேசி கண்டனம் தெரிவித்தனர். ஸ்மிருதி இராணி பேசுகையில், “ஆயுதப் படைகளின் தலைவரை அவமரியாதை செய்துவிட்டீர்கள். காங்கிரஸ் அவமரியாதை செய்து விட்டது. இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கூறினார். அப்போது, சேனியா காந்தி குறித்தும் பேசியுள்ளார். இதனால் காங்கிரஸ்-பாஜகவினரிடைய வாக்குவாதம் ஏற்பட்டது.
நிர்மலா சீதாராமன் கூறுகையில், “குடியரசுத் தலைவரை ‘ராஷ்டிரபத்தினி’ எனக் குறிப்பிட்டது ‘பாலின அவமதிப்பு’ “எனக் கூறினார். கடும் விமர்சனம், எதிர்ப்பு எழுந்தநிலையில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் மூலம் மன்னிப்பு கோரினார். அதில், “நீங்கள் வகிக்கும் பதவியை குறிப்பிடும்போது, தவறான வார்த்தையை பயன்படுத்தியதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வாய் தவறி வந்துவிட்டது. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மன்னிப்பை ஏற்றுக் கொள்ளவும்” என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார். அதில், “கடந்த வியாழக்கிழமை இந்த விவகாரத்தின் மீது பேசிய ஸ்மிருதி இரானி, சோனியா காந்தி குறித்து பேசினார். சோனியா குறித்து பேசிய அனைத்து கருத்துகளையும் அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil