Cafe Coffee Day owner VG Siddhartha: திங்கட்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் ’கபே காபி டே’-யின் நிறுவனரான வி.ஜி. சித்தார்த்தாவின் உடல் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான சித்தார்த்தா, திங்கட்கிழமை தனது ஓட்டுநருடன் மங்களூருவுக்குச் செல்லும் வழியில், நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் இறங்கி வெகுநேரமாகியும் வரவில்லை என டிரைவர் சொன்ன தகவலை அடுத்து அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
சித்தார்த்தாவின் உடல் உல்லால் அருகே உள்ளூர் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது. பின்னர் அந்த உடல் வென்லாக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, அது சித்தார்த்தா தான் என்பதை அவரின் நண்பர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சித்தார்த்தாவின் டிரைவர் அவரைக் காணவில்லை என்று தெரிவித்ததையடுத்து போலீஸார் தங்களது தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். தேசிய பேரிடர் மீட்புக் குழு, கடலோர காவல்படை, ஹோம் கார்டு, தீயணைப்பு துறை உள்ளிட்டவர்கள் நேத்ராவதி ஆற்றில் சித்தார்த்தாவை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சித்தார்த்தா நேற்று காணாமல் போன நிலையில் ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. கடன் விஷயத்தில் அவர் கொண்டிருந்த "மிகப்பெரிய அழுத்தம்" மற்றும் வருமான வரி அதிகாரிகளிடமிருந்து அவர் அனுபவித்துக் கொண்டிருந்த "துன்புறுத்தல்" பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், “என்மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரையும் ஏமாற்றியதற்காக மிகவும் வருந்துகிறேன்” எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சித்தார்த்தா ஜூலை 27-ம் தேதி ஒரு சில ஊழியர்களுடன் இறுதியாக பேசியிருக்கிறார். அந்த உரையாடல்கள் அவர் எப்போதும் பேசும் விதத்தில் இல்லை என ஊழியர்கள் கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது ஊழியர் ஒருவரிடம், ”நிலுவைக் கடனை முடித்து விட்டு, நிறுவனத்தின் நலன்களைக் கவனிக்கும்படி” கூறியுள்ளார் சித்தார்த்தா. அவர் மிகுந்த எமோஷனலாகக் காணப்பட்டதாகவும் காஃபி டே ஊழியர்கள் தெரிவித்தனர்.