திடக்கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்றாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் ரூ. 79 ஆயிரத்து 98 கோடி தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிபட்சமாக தமிழ்நாட்டுக்கு ரூ. 15 ஆயிரத்து 419 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றாத மற்றும் பிற சுற்றுச்சூழல் விதி மீறல்களில் ஈடுபட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் ரூ. 79 ஆயிரத்து 98 கோடி அபராதம் விதித்துள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றாத தமிழ்நாடு அதிகபட்சமாக ரூ.15 ஆயிரத்து 419 கோடி அபராதத்தை எதிர்கொள்கிறது, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா ரூ. 12 ஆயிரம் கோடி மற்றும் மத்தியப் பிரதேசம் ரூ. 9 ஆயிர்த்து 688 கோடி அபராதத்தை எதிர்கொள்கிறது.
நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் பிற சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றாத உத்தரபிரதேசம் ரூ. 5 ஆயிரம் கோடி, பீகார் ரூ. 4 ஆயிரம் கோடி, தெலங்கானா ரூ. 3 ஆயிரத்து 800 கோடி, மேற்கு வங்கம் ரூ. 3 ஆயிரத்து 500 கோடி, கர்நாடகா ரூ.3 ஆயிரத்து 400 கோடி, டெல்லி ரூ. 3 ஆயிரத்து 132 கோடி செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவிட்டுள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சி.பி.சி.பி), தேசிய நீர் தரக் கண்காணிப்புத் திட்டத்தின் (என்.டபிள்யூ.எம்.பி) கீழ் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 4 ஆயிரத்து 703 இடங்களில் உள்ள நீர்வளங்களின் நீரின் தரத்தை கண்காணிக்கிறது.
மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் ஆகியவற்றுடன் இணைந்து பல்வேறு கால இடைவெளிகளில் நிலப்பரப்பு, கடலோர பகுதிகள் மற்றும் நிலத்தடி நீர் இடங்களை கண்காணிப்பதை இந்தத் திட்டம் உள்ளடக்கி உள்ளது.
2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளுக்கான நீரின் தரத் தரவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் (கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020-ம் ஆண்டுக்கு மட்டும் விலக்கப்பட்டது), 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 279 ஆறுகளில் 311 மாசுபட்ட ஆற்றப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக கரிம மாசுபாடு அளவில் கவனம் செலுத்துகிறது. அதாவது, உயிர்வேதியியல் ஆக்ஸிஜன் தேவை (பி.ஓ.டி) (லிட்டருக்கு 3 மில்லிகிராம்), 1,920 இடங்களில் உள்ள 603 நதிகளின் தரவுகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்துள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு திட்டத்தின் கீழ் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுக் குழுக்களுடன் இணைந்து சீரான இடைவெளியில் கண்காணிப்பையும் நடத்துகிறது.
இந்த திட்டம் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 516 நகரங்களில் சுற்றுப்புற காற்றின் தர கண்காணிப்பு நிலையங்களின் வலையமைப்பை உள்ளடக்கியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“