/indian-express-tamil/media/media_files/2025/09/15/bengalore-police-2025-09-15-08-47-41.jpg)
பெங்களூரு, இந்தியாவின் ஐ.டி தலைநகராக மாறுவதற்கு முன்பே, நகர காவல்துறையினர் ஒரு பிரிட்டிஷ் குடிமகனின் கொலையை விசாரித்துக் கொண்டிருந்தபோது, இன்னொரு அதிர்ச்சிகரமான குற்றத்தை கண்டுபிடித்தனர். கொல்லப்பட்டவரின் காதலியை தொடர்புகொள்ள முயன்றபோது, அந்தப் பெண் கொடூரமாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானது தெரியவந்தது. இருப்பினும், ஒரு தீர்க்கமான விசாரணை மற்றும் ஒரு காவல் நிலையத்திற்குள் நடந்த 'பீர் பார்ட்டி', மூலம் குற்றவாளியை காவல்துறையினர் சிக்க வைத்துள்ளனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
பெங்களூருவை உலுக்கிய கொலை
1996 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில், பெங்களூரு மேற்கு சந்திரா லேஅவுட்டில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் ஒரு வெளிநாட்டு ஆண் உடல் கிடப்பதாக பெங்களூரு நகர காவல்துறைக்கு ஒரு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டபோது, கொலை செய்யப்பட்டவரின் சட்டைப் பைகளில் எம்.ஜி. ரோட்டில் உள்ள ஒரு துணிக்கடையின் ரசீது கிடந்தது. கடையை தொடர்பு கொண்ட காவல்துறை, அந்த நபர் பிரிட்டிஷ் குடிமகனான ஜேம்ஸ் வில்லியம் ஸ்டூவர்ட் என்பதை கண்டறிந்தது. மேலும் அவர் காட்டன்பேட்டில் உள்ள சுதா லாட்ஜில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த லாட்ஜிற்கு சென்றபோது, ஸ்டூவர்ட்டின் அறையில் 27 வயது பிரிட்டிஷ் பெண் ஒருவர் இருந்தார். இது குறித்து, அப்போது ஜே.ஜே. நகர் காவல் ஆய்வாளராக இருந்த பி.பி. அசோக் குமார், “நாங்கள் லாட்ஜிற்கு சென்ற போலீஸ் குழுவில் நானும் இருந்தேன். அறை கதவைத் திறந்ததும் அந்த பெண் கண்ணீர் விட்டு அழுதார். ஸ்டூவர்ட்டின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட தகவலை நாங்கள் சொல்வதற்கு முன்பே, அவர் அழுதுகொண்டே ஒரு ஆட்டோ ஓட்டுநரால் தான் கற்பழிக்கப்பட்டதாகக் கூறினாள். இதனால் ஒரு நிமிடம் நாங்கள் குழம்பிப் போனோம். அதே சமயம் கொலை பற்றி அவரிடம் சொல்லவில்லை.
ஸ்டூவர்ட்டைக் கொன்றவர்களே அவளையும் கற்பழித்திருக்கலாம் என்று முதலில் நினைத்தோம். ஆனால், பின்னர் அவை இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் என்று கண்டறிந்தோம். அந்த பிரிட்டிஷ் பெண் பெங்களூரு நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், தானும் ஸ்டூவர்ட்டும் காதலிப்பதாகவும், தாஜ் மஹால் பார்க்க இந்தியா வந்ததாகவும் கூறினார். பின்னர் ஹம்பி, பேலூர், ஹலேபீடூ போன்ற இடங்களை பார்க்க கர்நாடகா வந்தனர். பெங்களூருவில் அந்தத் தம்பதியினர் சுதா லாட்ஜில் தங்கியிருந்தனர்.
ஜனவரி 4, 1996 அன்று, இரவு 8 மணியளவில், ஸ்டூவர்ட்டும் அந்தப் பெண்ணும் சுதா லாட்ஜ் அருகிலுள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றனர். இரவு உணவு சாப்பிடும்போது ஸ்டூவர்ட்டுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவர் தனது அறைக்கு திரும்பிச் செல்வதாக கூறினார். இரவு உணவை தனியாக முடித்துக்கொண்ட அந்தப் பெண், லாட்ஜிற்குத் திரும்பியபோது வழி தவறிவிட்டார். அது கூகுள் மேப்ஸ் அல்லது வேறு வசதிகள் இல்லாத நாட்கள். வழி தவறியதால், அந்தப் பெண் ஒரு ஆட்டோ ரிக்ஷாவை வாடகைக்கு அமர்த்தி, ஹோட்டலுக்கு திரும்பினார்.
களைப்பாக இருந்த அந்தப் பெண் ஆட்டோவில் தூங்கிவிட்டார். இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர், அன்று அவ்வளவாக வளர்ச்சியடையாத பகுதியான ஆர்.ஆர். நகரை நோக்கி வண்டியை ஓட்டினார். ஏதோ தவறு நடப்பதை உணர்ந்த அந்தப் பெண் ஆட்டோவை நிறுத்தச் சொன்னார், ஆனால் அவன் வண்டியை நிறுத்தாமல் ஓட்டிய நிலையில், பாதுகாப்புக்காக அந்தப் பெண் தான் வைத்திருந்த ஒரு சிறிய கத்தியை வைத்து ஆட்டோ ஓட்டுநரின் முதுகில் மூன்று முறை குத்தினார். ஆனால், ஓட்டுநர் அவளைத் திருப்பி அடித்தார்.
இதன் பிறகு, ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்ற பிறகு, அந்தப் பிரிட்டிஷ் பெண்ணை கற்பழித்து, கொடூரமாகத் தாக்கிவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பி ஓடினான். இதன் பின்னர், காயமடைந்த அந்தப் பெண் ஒரு லாரி ஓட்டுநரின் உதவியுடன், இரவு 11:30 மணியளவில் சாமராஜ்பேட்டையில் உள்ள மத்திய காவல் நிலையத்தை அடைந்தார். அங்கு பணியில் இருந்த காவலர்களுக்கு ஆங்கிலம் புரியவில்லை என்பதால், அந்தப் பெண் சுதா லாட்ஜ்க்கு செல்ல உதவினர் என்று, தனது 'புல்லட் சவாரி' (Buller Savari) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள, அசோக் குமார், அந்தக் காவலர்கள் மூத்த அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்திருக்கலாம், ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை என்று குறிப்பிடுகிறார்.
ஒரு செவிலியர் காவல்துறைக்கு உதவியது எப்படி?
அப்போது பெங்களூரு மேற்கு துணை ஆணையராக (DCP) இருந்த பிரவீன் சூட், கற்பழிப்பு வழக்கை விசாரிக்க அசோக் குமாரை நியமித்தார். அதே சமயம் மற்றொரு காவல் ஆய்வாளரான அப்துல் அஸீம், ஸ்டூவர்ட் கொலை வழக்கை விசாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். இந்தச் செய்தி சர்வதேச ஊடகங்களில் அதிக கவனத்தைப் பெற்றது. இந்தியாவில், குறிப்பாக பெங்களூருவில் வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
இது குறித்து பேசிய அசோக் குமார், “இந்த வழக்கு எனக்கு மாற்றப்பட்ட பிறகு, ஒரு புதிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. நான் அந்தப் பெண்ணை எனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, எனது மனைவியையும் மகளையும் அறிமுகப்படுத்தினேன். படிப்படியாக, அவர் பாதுகாப்பாக உணர்ந்தார், என்னுடனும் எனது குடும்பத்தினருடனும் பழகத் தொடங்கினார். ஓரிரு நாட்களில், அவர் அன்று என்ன நடந்தது என்று கூறினாள். அது ஆட்டோ ஓட்டுநர் மைசூர் ரோட்டை நோக்கிச் சென்றான் என்ற தகவலைக் கொடுத்தது.
அதே சமயம், காவல்துறைக்கு அந்த ஆட்டோ ஓட்டுநரை கண்டறிவது ஒரு சவாலாகவே இருந்தது. "அந்தப் பெண் ஆட்டோ ஓட்டுநரின் முதுகில் மூன்று முறை குத்தியதுதான் எனக்கு கிடைத்த ஒரே துப்பு. இதனால் ஆர்.ஆர். நகரில் இருந்து 100 மீட்டருக்குள் இருந்த கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு நான் செல்ல ஆரம்பித்தேன். அதில் ஆசாத் நகர் அருகிலுள்ள சௌபாக்யா நர்சிங் ஹோமில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த ஒரு செவிலியர், 2 நாட்களுக்கு முன்பு ஒருவருக்கு முதுகில் காயங்களுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறினார். அந்த நோயாளி தனது பெயரை காதிரேஷ், 28 என்று பதிவு செய்திருந்தார். ஆனால், முகவரியைக் கொடுக்கவில்லை.
இந்தத் தகவலுடன், காவல் குழு பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களை (RTO) தொடர்பு கொள்ள ஆரம்பித்தது. அது ஆர்.டி.ஓ-வில் கணினிமயமாக்கப்பட்ட ஆரம்ப நாட்கள். ராஜாஜிநகர் ஆர்.டி.ஓ-வில் காவல்துறைக்கு ஒரு பெரிய துப்பு கிடைத்தது. ராஜாஜிநகர் ஆர்.டி.ஓ தரவுத்தளத்தில் காதிரேஷ் என்று தேடியபோது, அவரது குடியிருப்பு விவரங்களும், அவரது புகைப்படமும் கிடைத்தது. இப்போது அதை உறுதிப்படுத்த வேண்டிய நேரம். நான் அந்தப் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு சௌபாக்யா நர்சிங் ஹோமிற்கு சென்றேன். காதிரேஷ் உட்பட 4 புகைப்படங்களை அந்த செவிலியரிடம் காட்டினேன். அவர் காதிரேஷை சரியாக அடையாளம் கண்டார்.
காதிரேஷ் கெங்கேரி கேட் காவல் நிலையத்திற்குப் பின்னாலேயே வசித்து வந்ததுதான் வியப்பிற்குரிய விஷயம். குழுவினர் அவரது வீட்டில் சோதனை நடத்தி, காதிரேஷை கைது செய்தனர். குற்றத்தின் போது அவர் அணிந்திருந்த உடைகளையும் கைப்பற்றினர். காதிரேஷை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் முன்பே, குற்றவாளியை டி.சி.பி அலுவலகத்திற்கு அழைத்து வருமாறு கூறியுள்ளனர். ஊடகங்கள், பிரிட்டிஷ் தூதரகம் மற்றும் பொதுமக்கள் ஆகியவற்றின் அழுத்தம் காரணமாக, இந்த வழக்கு குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு (COD) மாற்றப்பட்டது.
எனக்கும் எனது குழுவிற்கும் இது ஒரு பெரிய ஏமாற்றமாக இருந்தது. சி.ஓ.டி அதிகாரிகள் ஏற்கனவே டி.சி.பி அலுவலகத்தில் இருந்தனர். நாங்கள் காதிரேஷ் மற்றும் வழக்கு தொடர்பான குறிப்புகளை சி.ஓ.டி அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம்" என்று அசோக் குமார் கூறினார்.
காவல் நிலையத்தில் நடந்த பீர் பார்ட்டி
காதிரேஷை சி.ஓ.டி-யிடம் ஒப்படைத்த பிறகு, அசோக் குமாரும் அவரது குழுவும் அந்த வழக்கிலிருந்து விலகி இருந்தனர். இருப்பினும், காதிரேஷ் கற்பழிப்பு சம்பவத்தை ஒப்புக்கொள்ளவில்லை. சி.ஓ.டி அதிகாரிகள் விசாரித்தபோதும், அவன் பேச மறுத்துவிட்டான். உள்ளூர் காவல் நிலையங்களில் 'போலீஸ் ட்ரீட்மென்ட்' (அடித்தல் போன்ற கடுமையான முறைகள்) பயன்படுத்தப்பட்டாலும், சி.ஓ.டி அதிகாரிகள் விசாரணைக்காக சந்தேக நபர்களை அடித்ததில்லை. காதிரேஷ் தொடர்ந்து அமைதியாகவே இருந்தான்" என்றார்.
சி.ஓ.டி அதிகாரிகள் அப்போது சூட்டை அணுகி, அவரது ஊழியர்களின் உதவியை நாடினர். "சில நிபந்தனைகளுடன் காதிரேஷை காவலில் எடுக்குமாறு பிரவீன் சூட் எனக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமானது என்பதால், அவனை சித்திரவதை செய்ய வேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது. நான் கெங்கேரி கேட் உதவி ஆணையர் பி.ஏ. பொன்னச்சாவை சந்தித்து, டி.சி.பி-யின் உத்தரவுகளை அவரிடம் தெரிவித்தேன்" என்று அசோக் குமார் கூறினார்.
அதன் பிறகு, அசோக் குமார், பொன்னச்சா, மற்றும் சி.ஓ.டி-யைச் சேர்ந்த 2 அதிகாரிகள் காதிரேஷை ஜே.ஜே. நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். “நாங்கள் அவனிடம் நண்பர்களாகப் பழக முடிவு செய்தோம். அவனது வாழ்க்கை மற்றும் குடும்பத்தைப் பற்றி அவனிடம் கேட்டேன். அவனுக்கு மது குடிக்க விருப்பமா என்றும் கேட்டேன். அவன் பீர் மட்டுமே குடிப்பதாப கூறினான். நான் இரண்டு பீர் பாட்டில்களை வாங்கி வந்தேன். அவனுக்குத் தெரியாமல், ஒவ்வொரு பாட்டிலிலும் 180 மில்லி பிராண்டியை கலந்தேன். அவன் 25 நிமிடங்களில் இரண்டு பாட்டில்களையும் முடித்தான். பின்னர் நான் சாதரணமாக அந்த பிரிட்டிஷ் பெண்ணைப் பற்றி பேச ஆரம்பித்தேன்.
சிறிது நேரத்திற்குள், நாங்கள் அவனை மிகவும் வசதியாக உணர வைத்தோம். அவன் அந்த பிரிட்டிஷ் பெண்ணை கற்பழித்த அன்று நடந்த சம்பவங்களை விவரிக்க ஆரம்பித்தான். அவன் தனது பால்ய நண்பரைப் போல பொன்னச்சாவின் தோளில் தட்டிக் கொடுத்தான். ஆனால், அந்த செயல்முறை முழுவதும் பதிவு செய்யப்படுவதை அவன் அறியவில்லை” என்று அவர் மேலும் கூறினார். காதிரேஷிடம் இருந்து சி.ஓ.டி காவல்துறைக்கு தேவையானவை அனைத்தும் கிடைத்தன. பின்னர் பெங்களூருவில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்தில் அவனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகையில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம், மருத்துவ சான்றுகள் மற்றும் செவிலியர் உள்ளிட்ட பிற சாட்சிகளின் வாக்குமூலங்கள் சேர்க்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டில், நீதிமன்றம் காதிரேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இப்போதெல்லாம் காவல்துறை ஒரு காவல் நிலையத்தில் இதுபோன்ற விஷயங்களைச் செய்வதை கற்பனை கூட செய்ய முடியாது," என்று அசோக் குமார் சிரித்தபடி, “அவை அந்தக் காலங்கள்" என்று கூறினார்.
மதுபோதையில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தைப் பற்றி, அசோக் குமார், அத்தகைய வாக்குமூலங்கள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன. ஆனால், அவற்றுக்கு உறுதியான சான்றுகள் ஆதரவாக இருக்க வேண்டும் என்றார். இந்த குற்றத்தின் அடிப்படையில், 2002 ஆம் ஆண்டில் 'போலீஸ் ஆபீசர்ஸ்' என்ற கன்னட திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.