Son of Manohar Parrikar quits BJP : கோவா உட்பட ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. பாஜக உ.பி. மற்றும் கோவாவில் பாஜக தன்னுடைய ஆட்சியை தக்க வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு தன்னுடைய வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகிறது. கோவாவின் பானாஜி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய ராணுவ அமைச்சரும், கோவா முதல்வருமான மனோகர் பரிக்கரின் மகன் உத்பல் பரிக்கர்.
ஆனால் அவருக்கு பானாஜிக்கு பதிலாக வேறு இரண்டு தொகுதிகளில் ஒன்றை தேர்வு செய்யுமாறு பாஜக வாய்ப்பளித்துள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உத்பல் இறுதியாக பாஜகவில் இருந்து வெளியேறி சுயேட்சையாக பானாஜியில் போட்டியிட உள்ளார்.
தன்னுடைய மனதில் எப்போதும் பாஜகவிற்கு தான் முக்கிய இடம் இருந்தது. ஆனாலும் கூட கட்சி என்னை எங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என்று மக்கள் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி, சிவசேனா போன்ற கட்சிகள் ஆதரவு அளித்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும், பாஜக சார்பில் போட்டியிடும் மோன்சரேட்டை எதிர்த்து போட்டிய ஆதரவு தேவை என்றும் கூறியுள்ளார். இது மிகவும் சவாலான காரியம் தான் இருந்தாலும் தன்னுடைய தந்தை கொண்ட மதிப்புகளின் வழியை பின்பற்றி தனித்து போட்டியிடுவதாக கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கரின் குடும்பத்தினருக்கு வாய்ப்பளிப்பதை விடுத்து மோன்சரேட்டிவிற்கு பானாஜியில் போட்டியிட வாய்ப்பளித்த காரணத்தால் அவர் மனம் உடைந்து இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
”பரிக்கரின் குடும்பம் எங்களின் குடும்பம். நாங்கள் அவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கின்றோம். உத்பாலுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அதில் அவர் போட்டியிட விரும்பவில்லை. மீதம் உள்ள தொகுதிகளில் போட்டியிட இருக்கும் வாய்ப்புகள் குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம் என்று பாஜகவின் கோவா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தேவேந்திர ஃபட்னாவிஸ், முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் போது குறிப்பிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil