Advertisment

பாஜக அரசின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கிறது - செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கருத்து

தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு கடந்த முறை நடந்து கொண்டது போன்று இல்லாமல், அதன் அணுகுமுறையில் மாற்றம் இருப்பதாக பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Sonam

லடாக் பகுதியை இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்க வேண்டுமென தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருபவர் பருவநிலை செயற்பாட்டாளரான சோனம் வாங்சுக். டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், மத்திய உள்துறை அமைச்சகத்துடன் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், தனது உண்ணாவிரத போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளார். 

Advertisment

அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில், லடாக்கை அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்ப்பதன் முக்கியத்துவம், யூனியன் பிரதேசங்களிள் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த உறுதியின் கீழ் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட சோனம் வாங்சுக், பேச்சுவார்த்தையின் மூலம் எந்தெந்த பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படுமென எதிர்பார்க்கிறார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, லடாக்கை அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்ப்பது, அரசியலமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வது, லடாக்கின் கலாசாரம், சுற்றுச்சூழல், நிலம், காடுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவற்றை உறுதி செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுமென தெரிவித்தார். மேலும், லடாக்கில் ஜனநாயகம் மீட்கப்படுமென அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீர் விரைவில் மாநில அந்தஸ்தை பெறுமனக் கூறிய அவர், லடாக்கும் அதே நிலையை எட்டும் என தான் நம்புவதாக கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 370 சிறப்பு பிரிவு நீக்கப்பட்டதில் இருந்து லடாக்கில் உள்ள இளைஞர்கள் வேலையின்மையால் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், லடாக்கில் அரசு பணியாளர் தேர்வாணையம் அமைப்பது குறித்து விவாதிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இது குறித்த பேச்சுவார்த்தைகள் பலமுறை தோல்வி அடைந்த பின்னரும், தற்போது மத்திய அரசு எந்த அடிப்படையில் செவிசாய்க்கும் என நம்புகிறீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அரசு தரப்பில் இருந்து எந்த உத்தரவாதமும் தரவில்லை என்ற போதிலும், தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில், இந்த விவகாரம் குறித்து லடாக்கில் இருந்து டெல்லிக்கு பாத யாத்திரை நடத்திய போது மக்களிடம் தீவிரத்தன்மையை காண நேர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

தேசத்தின் பாதுகாப்பு குறித்த இந்த பிரச்சனையை அரசு சரியான முறையில் கையாளவில்லை என்றால், அதன் விளைவுகள் மோசமாக இருக்குமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு லடாக் தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில், லடாக்கை அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் கொண்டு வருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும் போது, தற்போது எதன் அடிப்படையில் அரசு சம்மதம் தெரிவிக்கும் என சோனம் வாங்சுக்-இடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

மத்திய அரசிடம் கடந்த முறை இருந்த அணுகுமுறை தற்போது இருக்காது என தாங்கள் நம்புவதாகவும், அவ்வாறு நடைபெறாத பட்சத்தில் தங்கள் போராட்டம் மேலும் தீவிரமடையும் என அவர் பதிலளித்துள்ளார்.

அவை எந்த மாதிரியான போராட்டங்களாக இருக்குமென கேட்டதற்கு, அவற்றை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறோம் எனக் குறிப்பிட்டார்.

கடந்த முறையும் இதே அரசு அதிகாரத்தில் இருந்த நிலையில், தற்போது மட்டும் அவர்களிடம் எப்படி வித்தியாசம்  இருப்பதாக உணர்கிறீர்கள்? குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கான உரிமைகள் குறைக்கப்பட்டதாக கருதுகிறீர்களா? என சோனமிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, கடந்த முறை செயல்பட்டதை விட தற்போது அதிக பொறுப்புணர்வுடன் மத்திய அரசு பணிகள் மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார். மேலும், லடாக் தேர்தல் முடிவுகளை சுட்டிக் காட்டிய அவர், ஜனநாயகத்தில் மக்களால் ஒரு அரசை உருவாக்கவும் முடியும், அதே நேரத்தில் அழிக்கவும் முடியும் எனத் தெரிவித்தார். 

குறிப்பாக, "யூனியன் பிரதேசத்தின் உயிராக இருப்பது அதன் ஜனநாயகம் தான். அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் பழங்குடியின மக்கள் பாதுகாக்கப்படுவார்கள். இதனை நடைமுறைப்படுத்துவதாக பாஜக பல முறை உத்தரவாதம் அளித்தது. ஆனால், தற்போது லடால் உயிரற்ற உடல் போன்று விளங்குவதாக" சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.

மக்களின் குரல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கேட்கவில்லையா என்ற கேள்விக்கு, ஆம் என்று பதிலளித்த சோனம், ஜனநாயகம் இல்லாத அதிகாரம் அவ்வாறு தான் செயல்படும் எனத் தெரிவித்தார்.

பெருநிறுவனங்கள் மற்றும் சீன ஊடுருவல்களால் மக்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாகக் கூறினாலும், இந்தியா - சீனா முன்னெடுப்பின் மூலம் சில நன்மைகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுவது குறித்து சோனம் வாங்சுக்கிடம் கருத்து கேட்கப்பட்டது. 

லடாக்கின் வடக்கு பகுதியில் சீன ஊருடுவலாலும், தெற்கு பகுதியில் பெருநிறுவனங்கள் ஆதிக்கத்தாலும், மேய்ச்சலுக்கு செல்லும் மக்கள் உள்ளிட்டவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தங்கள் மேய்ச்சல் நிலங்கள் மின் உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் லடாக் இருந்திருந்தால் இவ்வாறு செயல்பட்டிருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருந்தாலும், வடக்கு பகுதியில் பொதுமக்களால் மேய்ச்சலுக்கு செல்ல முடியாத சூழலே நிலவுவதாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக, மேய்ச்சல் நிலங்கள் சீனாவின் வசம் சென்றதாக சோனம் தெரிவித்துள்ளார். சீனா தொடர் ஆக்கிரமிப்பில் ஈடுபடாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

லடாக்கை அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்ப்பது என்ற கோரிக்கை பேச்சுவார்த்தைக்குட்பட்டதா என்ற கேள்விக்கு, அதுவே லடாக்கிற்கு பொருத்தமானது என அவர் பதிலளித்தார். எனினும், லே அபெக்ஸ் கவுன்சில் மற்றும் கார்கில் ஜனநாயக அமைப்பு தலைவர்கள் இது குறித்து உறுதியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். மேலும், மக்களின் அடையாளத்தை பாதிக்காமல் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கூடிய மாற்று வழிகளையும் தான் வரவேற்பதாக சோனம் வாங்சுக் நம்மிடையே தெரிவித்துள்ளார்.

Central Government Ladakh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment