நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வியாழக்கிழமை அமலாக்க இயக்குநரகம் முன் விசாரணைக்கு ஆஜரானார். இதனிடையே, எதிர்க்கட்சிகளை அரசாங்கம் எதிரிகளாகக் கருதுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பல எதிர்க்கட்சிகளும் காங்கிரஸ் கட்சியின் பின்னால் அணிவகுத்து, கூட்டறிக்கை வெளியிட்டன. “நரேந்திர மோடி அரசாங்கம், விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி அதன் அரசியல் எதிரிகள் மற்றும் விமர்சகர்களுக்கு எதிராக தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கையை கட்டவிழ்த்துவிடுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுவாரஸ்யமாக, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் நாடாளுமன்ற அறையில் காங்கிரஸ் அழைப்பு விடுத்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், நாடாளுமன்ற அவையில் உத்தியை ஒருங்கிணைக்க தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும் இந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளது.
“பல அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து, நமது சமூகத்தின் சமூகக் கட்டமைப்பை அழிக்கும் மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத, விவசாயிகளுக்கு எதிரான மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான கொள்கைகளுக்கு எதிராக எங்கள் கூட்டுப் போராட்டத்தைத் தொடரவும், தீவிரப்படுத்தவும் தீர்மானிக்கிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), டிஆர்எஸ், சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய மாநாட்டுக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் ராகுல் காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் அமைதியாக இருந்தன.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உட்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் 24, அக்பர் ரோடு தலைமையகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அசோக் கெலாட், பாஜக தலைமையிலான அரசாங்கம் ஒவ்வொரு எதிர்க்கட்சியையும் தனது எதிரியாகப் பார்க்கிறது என்று குற்றம் சாட்டினார்.
“அரசியலில் எதிரிகள் இல்லை. ஆனால், எதிர்க்கட்சிகளை எதிரிகளாகவே கருதுகின்றனர். சமீபத்தில் ஹைதராபாத்தில், மாநிலக் கட்சிகள் பற்றி பேசிய மோடி… வாரிசு அரசியல் பற்றி பேசினார். அவர்கள் முன்பு காங்கிரஸ்-முக்த் பாரத் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இப்போது அவர்களின் மந்திரம் எதிர்க்கட்சி-முக்த் பாரத் அதனால், இந்தியாவில் அவர்களிடம் சர்வாதிகாரம் இருக்கிறது. அந்தத் திசையில் நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது” என்று அசோக் கெலாட் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”