Manoj C G
Sonia Gandhi appointed as a new Interim president of Congress Party : 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு மே மாதம் தன்னுடைய பதவியை காங்கிரஸின் அன்றைய தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து புதிய தலைவர் யார் என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வந்தது. நேற்று காங்கிரஸ் காரியக் கமிட்டியின் கூட்டம் 12 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்றும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க இயலவில்லை.
20 மாதங்களுக்கு முன்பு ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவித்தார் சோனியா காந்தி. இந்நிலையில் நேற்று நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்தின் முடிவில் சோனியா காந்தி இடைக்கால தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார். விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனாலும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது குறித்து தெளிவான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை.
தற்போது இடைக்கால தலைவராக மீண்டும் பதவிக்கு வந்திருக்கும் சோனியா காந்தியின் மிக முக்கியமான சவாலாக இருக்கப்போவது ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மற்றும் ஹரியானா மாநிலங்களில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தான். காங்கிரஸ் கட்சியின் தலைவராக 20 வருடங்களுக்கு மேலாக பதவி வகித்து வந்த சோனியா காந்தி டிசம்பர் 2017 ஆம் ஆண்டு தன்னுடைய பதவியை தன் மகனுக்கு கொடுத்தார்.
Congress Working Committee unanimously names Smt. Sonia Gandhi as Interim President. pic.twitter.com/pqoZKZchqe
— Congress (@INCIndia) August 10, 2019
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி வத்ரா தன்னால் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட இயலாது என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி சோனியா காந்தியை இடைக்கால தலைவராக அறிவித்தார்கள். அப்போது சோனியா காந்தி “இது எனக்கு மிகவும் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது... நான் இதை எதிர்பார்க்கவே இல்லை... இது குறித்து நான் யோசிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இரண்டு தீர்மானங்களுடன் இருமுறை நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
பஞ்சாபின் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “சோனியா காந்தி மீண்டும் தலைமைக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் அவர் மீண்டும் பதவிக்கு வந்திருப்பது காங்கிரசின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்யும். அவருடைய அனுபவம் மற்றும் புரிந்துகொள்ளும் தன்மை தற்போதைய சூழலில் கட்சிக்கு மிகவும் அவசியமானது. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் இளமையான தலைவர் தேவை என்று முதன் முதலாக கூறிய காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல்வர் அமரிந்தர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் காரியக் கமிட்டியின் இந்த முடிவை அனைவரும் வரவேற்றுள்ளனர். காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் குமார் செல்ஜா குறிப்பிடுகையில் இது போன்ற அதிக சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார். முதலில் சூழ்நிலைகளை கையில் கொடுத்துவிட்டு பின்பு சோனியா காந்தியை இடைக்கால தலைவராக இருப்பது வரவேற்கத்தக்க முடிவு என முன்னாள் மத்திய அமைச்சர் கே வி தாமஸ் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள், அனைத்திந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக நீடிக்கலாம் என்று பலரும் தங்கள் கருத்துக்களை கூறிய நிலையில் அதை முடியாது என்று முற்றிலுமாக மறுத்துவிட்டார் ராகுல் காந்தி. இந்நிலையில் சோனியாவை இடைக்கால தலைவராக தேர்வு செய்துள்ளனர்.
20 மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான பொறுப்பினை வகுத்து பல்வேறு திட்டங்களை தெளிவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த ராகுல் காந்திக்கு நேற்று நன்றி உரை கூறப்பட்டது. நேற்று இரவு இரண்டாம் முறையாக காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடைபெற்றபோது கமிட்டியின் ஐந்து குழுக்கள் காங்கிரஸ் தலைவர்கள், எம்பிக்கள், பொதுச் செயலாளர்கள் ஆகியோரின் கருத்துக்களை தெளிவாக கேட்டு அதன்பின்பு இரண்டு முக்கியமான முடிவுகளை கொண்டு வந்தனர்.
அதன்படி முதலாவது தேர்வாக ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக நீடிக்கலாம் என்ற கருத்து வைக்கப்பட்டது. இரண்டாவதாக பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பதவி ஏற்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் பிரியங்கா காந்தி கண்டிப்பாக முடியாது என்று மறுத்துவிட்டார்.
மேலும் படிக்க : காங்கிரஸ் காரிய கமிட்டி: ஒரே நாளில் இரு முறை கூடி ஆலோசனை
காந்தி குடும்பத்தில் இல்லாத காங்கிரஸ் தலைவரை ஏற்க இயலாது!
காந்தி குடும்பத்தினரை தவிர வேறு யாரும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வந்தால் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப் பான்மையில் நிறைய காங்கிரஸ் தலைவர்கள் இல்லை என்பது நேற்றைய காங்கிரஸ் காரியக் கமிட்டியின் கூட்டத்தின்போது அனைவருக்கும் தெரியவந்தது. பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் சுனில் ஜாக்கர் கூறுகையில் “காந்தி குடும்பத்தைத் தவிர வேறு யாரேனும் இக்கட்சியின் தலைவராக வந்தால் நான் கட்சி பணி செய்வதற்கு பதிலாக வீட்டிலேயே இருந்து கொள்வேன். சில பெயர்கள் காதில் வந்து விழுகின்றன. ஆனால் அவர்களை என்னால் கண்டிப்பாக தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.
அவருக்கு முன்பு பஞ்சாப் காங்கிரஸின் தலைவராக இருந்த பிரதாப் சிங் பஜ்வா கூறுகையில் காந்தி குடும்பத்திலிருந்து ஒரு தலைவரை நியமிக்காவிட்டால் கட்சி சுக்குநூறாக உடைந்துவிடும். மேலும் ராகுல் காந்தி பிஜேபி விரித்த வலையில் விழுந்துவிட்டார் என்றும் கூறியிருந்தார்.
முகுல் வாஸ்னிக் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவரும் கட்சியின் தலைவராக செயல்படுவார்கள் என்று காலை 11 மணி அளவில் தகவல்கள் வெளியாகின. ராகுல் காந்தியோ, மாநில காங்கிரஸ் தலைவர்கள், எம்பிகள் மற்றும் பொதுச் செயலாளர்கள் ஆகியோரின் முடிவை கேட்டுவிட்டு தலைவரை தேர்வு செய்யலாம் என்று கூறிய பின்பு அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. அனைத்து தலைவர்களும் தனித்தனியாக தங்களின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர். நிறைய பேர் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக வரலாம் என்று கூறி இருந்தனர். மீண்டும் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இரவு எட்டு முப்பது மணிக்கு துவங்கிய. து ராகுல் காந்தி ஒரு மணி நேரம் கழித்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். சரியான முடிவுகள் எட்டப்படாத நிலையில் சோனியா காந்தியை புதிய இடைக்கால தலைவராக அறிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.