காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலமாக கட்சி தொடர்ந்து, அவரை மையப்படுத்தி இயங்க இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிகாரபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு இது போதுமான எண்ணிக்கை அல்ல. அந்த எண்ணிக்கைக்கு 3 எம்.பி.க்கள் குறைவாக காங்கிரஸ் பெற்றிருக்கிறது.
காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்
தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் இன்று (ஜூன் 1) டெல்லியில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் 52 பேர் மற்றும் அதைவிட அதிக எண்ணிக்கையிலான காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 25-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி கூறினார். காரிய கமிட்டி அதை ஏற்கவில்லை. அதன்பிறகு ராகுல் காந்தி பங்கேற்ற முதல் கூட்டம் இது. எனவே அந்த வகையிலும் இந்த கூட்டம் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவரை தேர்வு செய்வதுதான் இந்தக் கூட்டத்தின் நோக்கம். ராகுல் இந்தப் பதவியை ஏற்பாரா? என்கிற விவாதங்களும் இருந்தன. எனினும் சோனியா காந்தியே மீண்டும் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவராக இந்தக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தத் தகவலை காங்கிரஸ் ஊடக தொடர்புக் குழுத் தலைவர் ரந்தீப் சிங் சர்ஜிவாலா, ட்விட்டரில் தெரிவித்தார். காங்கிரஸுக்கு வாக்களித்த 12 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அதில் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியும் தனது டிவிட்டர் பக்கத்தில் சோனியாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அடுத்தகட்டமாக காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவரை சோனியா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.