காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவைச் சந்தித்தார். 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஜி-23 தலைவர் ஒருவருடன் ராகுல் காந்தியின் முதல் சந்திப்பு இது.
காங்கிரஸ் கட்சியின் ஜி-23 தலைவர்கள் சிலர் சந்தித்து, அனைத்து மட்டங்களிலும் கூட்டு மற்றும் உள்ளடக்கிய தலைமை மற்றும் முடிவெடுப்பதற்கு அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்ட 2 நாட்களுக்குப் பிறகு, திடீர் திருப்பமாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
சோனியா காந்திக்கும் சில தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு நடைபெறுகிறது என்று வட்டாரங்கள் கூறிய நிலையில், சோனியா காந்தி குலாம் நபி ஆசாத்தை சந்திப்பு நடந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், “சோனியா காந்தியுடனான சந்திப்பு நல்லபடியாக இருந்தது. அவர் தலைவராகத் தொடர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக முடிவு செய்தனர்; நாங்கள் சில ஆலோசனைகளை பகிர்ந்துகொண்டோம்.” என்று கூறினார்.
“ஐந்து மாநிலங்களில் தோல்விக்கான காரணங்கள் குறித்து செயற்குழுவிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டது. எதிர்கட்சிகளை தோற்கடிக்க வரும் சட்டசபை தேர்தலில் ஒற்றுமையாக போராடுவது குறித்து விவாதம் நடத்தப்பட்டது” என குலாம் நபி ஆசாத் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸின் 23 பேர் கொண்ட குழு தலைவர்களில் சில தலைவர்கள், குழுவின் எதிர்கால உத்தியை உருவாக்கவும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் தேர்தல் தோல்வியைப் பற்றி விவாதிக்கவும் இரவு உணவுக்காக குலாம் நபி ஆசாத்தின் இல்லத்தில் புதன்கிழமை கூடினர்.
இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்: “சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் நம்முடைய தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் இருவரும் தொடர்ந்து வெளியேறுவது போன்றவற்றையும் இதனால் மனச்சோர்வு அளிக்கும் விளைவுகளைப் பற்றி ஆலோசிக்க… காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாங்கள் சந்தித்தோம். காங்கிரஸ் கட்சி அனைத்து மட்டங்களிலும் கூட்டு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தலைமை மற்றும் முடிவெடுக்கும் மாதிரியை பின்பற்றுவதே முன்னோக்கி செல்லும் ஒரே வழி என்று நாங்கள் நம்புகிறோம்.ஜ்” என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவைச் வியாழக்கிழமை சந்தித்தார். இது 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஜி-23 தலைவருடனான ராகுல் காந்தியின் முதல் சந்திப்பு ஆகும்.
அதிருப்தியில் உள்ள ஜி-23 குழு 2020ல் சோனியா காந்திக்கு கட்சியில் பெரும் மாற்றங்களை செய்யக் கோரி கடிதம் எழுதியிருந்தனர்.
சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததை அடுத்து, சோனியா காந்தி ஐந்து மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களான உத்தரபிரதேசம் மாநில அஜய் குமார் லல்லு, பஞ்சாப் மாநிலத்தின் நவ்ஜோத் சிங் சித்து, உத்தரகாண்ட் மாநிலத்தின் கணேஷ் கோடியல், கோவாவில் கிரிஷ் சோடன்கர், மணிப்பூரில் நமீரக்பம் லோகேன் சிங் ஆகியோரிடம் பதவியை ராஜினாமாக் செய்ய வேண்டும் எனக் கேட்டார்.
இதற்கு முந்தைய நாள், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல், காந்தி குடும்பத்தினர் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகி, வேறு சிலருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய நேரம் இது என்று கூறினார். 5 மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியடைந்ததை சுயபரிசோதனை செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடைபெறும்போது ஆகஸ்டு-செப்டம்பர் வரை சோனியா காந்தி கட்சித் தலைவராக நீடிப்பார் என்று முடிவு செய்த ஒரு நாள் கழித்து இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.