காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக இன்று (புதன்கிழமை) வெளிநாடு செல்லவுள்ளார் என்று நேற்று இரவு அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவருடன் ராகுல், பிரியங்கா காந்தி செல்வுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற்ற உள்ளது. தலைவரை தேர்ந்தெடுப்பதில் கட்சியில் குழப்பம் நிலவி வரும் நிலையில், சோனியா தற்போது மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார். தேர்தலுக்கான அட்டவணை இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட ராகுல் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். மேலும் குடும்பத்தில் இருந்து யாரும் கட்சி தலைமை தாங்குவதையும் அவர் விரும்பவில்லை. இது காங்கிரஸில் மேலும் குழப்பதை ஏற்படுத்தி, ஒரு நிச்சயமற்ற சூழலாக இருந்து வருகிறது.
காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு பொதுச் செயலாளர் (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "சோனியா காந்தியுடன் ராகுல், பிரியங்கா காந்தி செல்கின்றனர். டெல்லி திரும்பும் முன் சோனியா அவரது தாயாரை சந்தித்துவிட்டு வருவார். செப்டம்பர் 4 டெல்லியில் நடைபெற உள்ள காங்கிரஸின் ‘மெஹங்காய் பர் ஹல்லா போல்’ பேரணியில் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றுவார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அட்டவணை இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றார். ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 21ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக திங்கட்கிழமை சோனியா, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்து பேசினார். அப்போது கெலாட், ராகுல் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து வலியுறுத்தினார். "ராகுல் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் எனப் பலர் விரும்புகின்றனர். அவ்வாறு நடக்கவில்லை என்றால் காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றம் அடைவர். மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர் இந்த பதவியை தானே ஏற்க வேண்டும்" என்று கெலாட் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும் கட்சியில் கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், காந்தி குடும்பத்தைத் தவிர வேறு யாரும் கட்சியை வழிநடத்த முடியாது என்றார். அதேவேளையில், காங்கிரஸ் தலைவராக ராகுலை கட்டாயப்படுத்த முடியாது என்று திக்விஜய் சிங் கூறினார்.
ராகுல் தலைவராக பதவியேற்க வேண்டும் அல்லது சோனியா காந்தியே தொடர வேண்டும் என்பதே தனது கருத்து என சவுத்ரி வெளிப்படையாக கூறினார். “ராகுல்-ஜி அல்லது சோனியா-ஜி தான். இதற்கு வேறு மாற்று இல்லை. யார் என்ன சொன்னாலும் இதுதான் யதார்த்தம்,” என்றார்.
இதற்கிடையில், கட்சியின் ஜி23 தலைவர்கள் காந்தி குடும்பத்தை தவிர வேறு ஒருவர் கட்சி பொறுப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். "ராகுல் அல்லது சோனியா என யார் வந்தாலும் கட்சியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. காங்கிரஸுக்கு தற்போது புதிய மாற்றம் தேவை. அமைப்பில் மாற்றங்கள் தேவை " என்று ஜி 23தலைவர்களுள் ஒருவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.