அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் அதிக பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் மல்லிகார்ஜூன கார்கே, அக்கட்யின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு கிட்டத்தட்ட 22 ஆண்டுக்கு பின்னர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த எம்.பி., சசி தரூர் களம் கண்டார்.
திங்கள்கிழமை (அக்.17) தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்குகள் புதன்கிழமை (அக்.19) எண்ணப்பட்டன. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளில் மல்லிகார்ஜூன கார்கே 7879 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர், 1,000 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.416 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், மல்லிகார்ஜூன கார்கே கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேசினார். தேர்தலுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, “கட்சிக்காக சோனியா மற்றும் காந்தி குடும்பம் நிறைய செய்துள்ளன.
நான் கட்சித் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் சோனியா காந்தியுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன். அதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் தேர்தல் இன்னும் சிறப்பாக நடந்திருக்கலாம் என சசி தரூர் கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “6 பூத்களில் அதிகாரப்பூர்வமற்ற சீல்கள் காணப்பட்டன. பூத்களில் வாக்கு இல்லாதவர்களும் இருந்ததை பார்க்க முடிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சிக்கு மல்லிகார்ஜூன கார்கே தற்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி குடும்பம் அல்லாத ஒருவர் தலைவர் ஆகியுள்ளார்.
ராகுல் காந்தி வாழ்த்து
காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பாரத் ஜோடோ யாத்திரையில் உள்ள ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “மல்லிகார்ஜூன கார்கே தலைமையின் கீழ் கட்சிப் பணிகள் செய்ய தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.