காங்கிரஸின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வுப் பெறுவார், என சில காலமாக பேச்சுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், வரும் பொதுத் தேர்தலில், ரேபரேலி தொகுதியில் அவர் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.
லோக் சபா தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் 11 தொகுதிகளுக்கும், குஜராத் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது காங்கிரஸ் மேலிடம்.
5 முறை எம்.பி-யான சலீம் இக்பால் ஷெர்வானி பதாவுன் தொகுதியில் போட்டியிடுகிறார். ஃபரூக்காபாத் தொகுதியில் சல்மான் குர்ஷித், ஜித்தின் பிரசாத் தவ்ராஹா தொகுதியில், ஆர்.பி.என் சிங் குஷி நகரிலும், அன்னூ தாண்டன் உன்னாவு தொகுதியிலும், நிர்மல் காத்ரி ஃபைசாபாத்திலும், பிரிஜ் லால் காப்ரி ஜலாலுன் தொகுதியிலும், இம்ரான் மஸூத் ஷஹரன்பூர் தொகுதியிலும், ராஜாராம் பால் அக்பர்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
குஜராத்தைப் பொறுத்தவரை, பாரத்சின் சோலான்கி ஆனந்த் தொகுதியிலும், ராஜு பார்மர் மேற்கு அகமதாபாத்திலும், பிரஷாந்த் படேல் வடோடரா தொகுதியிலும், மோகன் சிங் ராத்வா சோட்டா உதய்பூர் தொகுதியுலும் போட்டியிடுகின்றனர்.
மேற்கூறிய 11 உத்திர பிரதேச தொகுதிகளில், காங்கிரஸ் 8 தொகுதிகளை 2009-ல் கைப்பற்றியது. ஷரன்பூரில் பி.எஸ்.பி கட்சியும், பதாவுன் மற்றும் ஜலாலுன் தொகுதிகளில் எஸ்.பி கட்சியும் வெற்றி பெற்றது. 2004-ல் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளைத் தவிர்த்து மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வியத் தழுவியது. 2014-லும் இதே நிலை தான் நீடித்தது.
இந்நிலையில் பா.ஜ.க தேர்தல் குழு இன்று சந்தித்தித்து, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை முன்னெடுக்கிறது.