காங்கிரஸ் கட்சியின் ஜி-23 தலைவா்கள், டெல்லியில் கட்சியின் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாதின் இல்லத்தில் புதன்கிழமை இரவு சந்தித்து பேசினார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்தது, கட்சி தலைமைக்கும் ஜி23 குழு தலைவர்களுக்கும் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திடம் பேசியதாக வட்டாரஙகள் தெரிவிக்கின்றன.
சோனியாவிற்கும் சில தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவித்தாலும், ஜி23 தலைவர்கள் கூற்றுப்படி அனைத்து நிலைகளிலும் முடிவுகளை எடுக்கக் கூடிய அனைவரையும் உள்ளடக்கிய கூட்டுத் தலைமையை உருவாக்குவது மட்டுமே காங்கிரஸ் கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான ஒரே வழி என வலியுறுத்துகின்றனர்.
ஜி-23 தலைவர்கள் சிலர் ஆசாத்தின் இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு சந்தித்து பேசினர். அப்போது, கூட்டத்திற்கு புதிய என்ட்ரியாக 2017ல் காங்கிரஸிலிருந்து விலகிய மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர், லோக்சபா எம்பி மற்றும் முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர், 2017இல் காங்கிரஸிலிருந்து விலகிய குஜராத் தலைவர் ஷங்கர்சிங் வகேலா ஆகிய மூன்று பேர் வருகை தந்தனர். வகேலா 2019ல் என்சிபியில் சேர்ந்தார், ஆனால் கடந்த ஆண்டு வெளியேறினார். தற்போது, மீண்டும் காங்கிரஸில் இணைய ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.
முதன்முறையாக, ஜி23 குழு தலைவர்கள் சந்திப்பை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் வகையில், 18 தலைவர்களும் கையெழுத்திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறும் சம்பவங்கள் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாங்கள் ஒன்றுக்கூடியுள்ளோம். அனைத்து நிலைகளிலும் முடிவுகளை எடுக்கக் கூடிய அனைவரையும் உள்ளடக்கிய கூட்டுத் தலைமையை உருவாக்குவது மட்டுமே காங்கிரஸ் கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான ஒரே வழி.
பாஜகவை எதிர்க்க வேண்டுமெனில், காங்கிரஸை வலுப்படுத்தியாக வேண்டும். வரும் 2024 மக்களவைத் தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு எதிராக நம்பிக்கைக்கு உரிய மாற்றை உருவாக்க வேண்டுமெனில், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், ஆனந்த் சா்மா, கபில் சிபல், பூபிந்தா் சிங் ஹூடா, பிருத்விராஜ் சவாண், மணீஷ் திவாரி, சசி தரூா், விவேக் தன்கா, ராஜ் பப்பர், அகிலேஷ் பிரசாத் சிங், சந்தீப் தீக்ஷித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற தலைவர் ஒருவர், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், எங்களை காங்கிரஸிலிருந்து வெளியே அனுப்பும் வரை, நாங்கள் விட்டு விலகப்போவதில்லை. கட்சியில் ஜனநாயகம் இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம்.கட்சியை ஜனநாயகப்படுத்தவும், 2024 ஆம் ஆண்டு பாஜகவுக்கு நம்பகமான மாற்றீட்டை உருவாக்கவும், மேற்குறிப்பிட்ட நோக்கங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தைத் திரட்டுவதற்காக நாடு முழுவதும் பயணம் செய்வோம் என தெரிவித்தார்.
ஜி23 கூட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், கோவாவில் ராஜ்யசபா எம்பி ரஜனி பாட்டீல், மணிப்பூரில் ஜெய்ராம் ரமேஷ், பஞ்சாபில் அஜய் மக்கன், உத்தரபிரதேசத்தில் ஜிதேந்திர சிங் மற்றும் உத்தரகாண்டில் அவினாஷ் பாண்டே ஆகிய ஐந்து தலைவர்களை சோனியா நியமித்ததாக காங்கிரஸ் அறிவித்தது. இவர்கள் தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலை மற்றும் நிறுவன மாற்றங்களை குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள் என தெரிகிறது.
G-23 தலைவர் ஒருவர் கூறுகையில், தோல்விக்கு காரணமானவர்கள் தேர்தலுக்கு பிந்தைய நிலவரத்தை மதிப்பிடுவதற்கு நியமிக்கப்பட்டவர்கள் என கூட்டம் ஒருமனதாக வருத்தம் தெரிவித்ததாக கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.