தயாரிப்பாளரிடமே நம்பர் பிளேட் : இந்தியாவின் புதிய கார்கள் குறித்து அறிவிப்பு

வாகனங்களுக்கான பதிவு எண்களை பொறிக்கும் நம்பர் பிளேட்களை முன்னதாகவே பொறுத்திய கார்களை இந்தியா உற்பத்தி செய்யும்

சந்திரன் ஆர்

வாகனங்களுக்கான பதிவு எண்களை பொறிக்கும் நம்பர் பிளேட்களை முன்னதாகவே பொறுத்திய கார்களை இந்தியா உற்பத்தி செய்யும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள கார்களில் பதிவு எண்ணைக் குறிப்பிடும் நம்பர் பிளேட்கள் இருப்பதில்லை. வாகனத்தை வாங்கியவர், அதை அந்தந்த பகுதியில் உள்ள ஆர்டிஓ (RTO) அலுவலகத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்தபின், அதற்கு அந்தந்த மாநிலத்தைப் பொறுத்து வெவ்வேறு எழுத்துகளைக் கொண்டு குறியீடுகளுடன் பதிவு எண்கள் ஒதுக்கப்படும். அதன் பின்னர்தான், நம்பர் பிளேட் என்ற பேச்சே வரும். எனினும், குற்றச் செயலில் ஈடுபடுவர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் போலியான நெம்பர் பிளேட்களை பயன்படுத்துவது அதிகரித்தபோது, உடனடியாக தங்கள் விருப்பப்படி நம்பர் பிளேட்டை மாற்றிக் கொள்ள இயலாத வகையில் அதைப் பொறுத்தும் முறையை மத்திய அரசு சில காலத்துக்குமுன் அறிமுகம் செய்தது. அதன் அடுத்த கட்ட நிகழ்வாக, தற்போது வாகனத் தயாரிப்பாளரிடமே நம்பர் பிளேட் பொறுத்தும் முறை தொடங்க உள்ளது. எனினும், இந்த நம்பர் பிளேட்டில் வாகனத்தின் பதிவு எண்ணை பதிவு செய்வது என்பது சம்மந்தப்பட்ட வாகனத்தின் பதிவு நடக்கும் ஆர்டிஓ அலுவலகத்தின் பொறுப்பில்தான் வரும்.

தற்போது மாநிலம், அதில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் எது என்பதை பொறுத்து ஒரு காருக்கு பதிவு எண் பெற 800 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை செலவாகிறது என்கின்றன தகவல்கள். ஆனால், வாகன உற்பத்தியாளரே பொறுத்தும் நம்பர் பிளேட்டில் அவ்வளவு செலவு இருக்காது என நம்பப்படுகிறது.

வாகன உற்பத்தி, எரிபொருள் பயன்பாடு, காற்றுமாசு குறைத்தல் போன்ற விஷயங்களில் பல மாற்றங்கள் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்றாக, 2019 ஜூலை 1ம் தேதிக்கு பிறகு இந்த நம்பர் பிளேட்டை தயாரிப்பாளரிடமே பெறுவது என்பது தொடங்கும் என்கிறார்கள், தகவல் அறிந்தவர்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close