சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமைப்பில் முன்னாள் தலைவர் சீனிவாசனை மீண்டும் இணைக்க, சவுரவ் கங்குலி தலைமையிலான புதிய பிசிசிஐ தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியும், செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் வரும் 23ம் தேதி அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளனர். இந்நிலையில், புதிய தலைமையின் கூட்டம், கடந்த ஞாயிற்றுக்கிழமை (13ம் தேதி) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிசிசிஐ மற்றும் ஐசிசி அமைப்பின் முன்னாள் தலைவர் சீனிவாசனை, மீண்டும் ஐசிசி அமைப்பிற்குள் இணைப்பதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.
சட்டம் சொல்வது என்ன ? : பிசிசிஐ அமைப்பின் மாற்றியமைக்கப்பட்ட சட்டவிதிகளின்படி, ஒருவர் 9 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருந்தாலோ அல்லது 70 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தாலோ அவருக்கு மீண்டும் ஐசிசியிலோ அல்லது பிசிசிஐயிலோ பதவிகள் வழங்கக்கூடாது என்று சட்டம் உள்ளது.
கங்குலி தரப்பு சொல்வது என்ன? : சர்வதேச அளவிலான கிரிக்கெட் வருவாயில், இந்தியாவிற்கு மட்டுமே 75 முதல் 80 சதவீத பங்கு உள்ளது. ஐசிசி தலைவராக சீனிவாசன் இருந்தபோது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளால், இந்தியாவிற்கு அதிகளவில் வருவாய் வந்தது. இது கிரிக்கெட் விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், தற்போதைய தலைமையால், ஐசிசியின் நடவடிக்கைகளை சரிவர கவனிக்க முடிவதில்லை. எனவே, சீனிவாசன் போன்ற அனுபவமிக்க ஒருவர் மீண்டும் ஐசிசி அமைப்பில் அங்கம் வகித்தால் இந்தியா மட்டுமல்லாது கிரிக்கெட் விளையாடும் நாடுகள் அனைத்தும் பயன் பெறும் என்று பிசிசிஐ புதிய தலைவர் கங்குலி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சீனிவாசனை மீண்டும் ஐசிசி அமைப்பில் சேர்ப்பதற்கு தடையாக உள்ள பிசிசிஐயின் மாற்றியமைக்கப்பட்ட சட்ட விதிகளை எதிராக, உச்சநீதிமன்றத்தை நாடவும் கங்குலி தரப்பு திட்டமிட்டுள்ளது.
கங்குலி மூலமான இந்த காய் நகர்த்தலின் மூலம், சீனிவாசனின் ஐசிசி மறுநுழைவு குறித்த ராஜதந்திர நடவடிக்கைகள் பலனிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.