சார்ஸ்-கொவி-2 வைரஸ், விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவுவதற்கு முன்னர், எந்த விலங்கினுக்குள் அது வளர்ந்திருக்க முடியும்? என்று கண்டறியவும், கோவிட்- 19 பெருந்தொற்றில் உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பக்கச்சார்பற்ற, சுயாதீனமான மற்றும் விரிவான மதிப்பீட்டை செய்வதற்கான தீர்மானத்தை இந்தியா உட்பட 62 நாடுகள் உலக சுகாதார சபையில் கொண்டு வரவுள்ளன. சீனாவும்,அமெரிக்காவும் இந்த தீர்மானத்தில் பங்கு கொள்ள வில்லை. உலக சுகாதார அமைப்பின் முடிவெடுக்கும் அமைப்பான சுகாதரா சபை இந்த தீர்மானத்தை வரும் திங்களன்று எடுத்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது .
இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற மூன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை நாடுகளும், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளும் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது.
பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் தீர்மானத்தில் கலந்து கொள்ளவில்லை. சார்க் நாடுகளில் பங்களாதேஷ், பூட்டான் ஆகிய நாடுகள் மட்டுமே தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளது.
நாவல் கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது, எப்படி அது வளர்ந்தது, இந்த பெருந்தொற்றுக்கு உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கை உண்மையில் எப்படி இருந்தது? என்று சுயாதீனமாக மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் குறித்து சர்வதேச மன்றத்தில் இந்தியா ஒரு நிலைப்பாட்டை எடுத்தது இதுவே முதல் முறை.
கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாகவும், நெருக்கடி காலத்திற்கு பின் பிரச்சினையை மறுபரிசீலனை செய்யும் என்று தான் இதுவரை புதுடெல்லி தெரிவித்து வந்தது.
டிசம்பர் 2019க்கு முன் பதிவான சார்ஸ்-கொவி-2 பாதிப்புகள் எதுவும் இல்லை. ஆனால், சார்ஸ்-கொவி-2வின் முதல் மனித பாதிப்புகள் அக்டோபர் மத்தியில் இருந்து டிசம்பர் மத்தி வரை தோன்றி இருக்கலாம் என்று முதல்கட்ட மரபணு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதலில் தோன்றியதாக பரவலாக நம்பப்படுகிறது. அங்கு கோவிட் -19 இன் முதல் வழக்கு தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா மற்றும் வேறு சில நாடுகள் கொரோனா வைரசை அரசியலாக்கக்கூடாது என்றும், சரியான நேரத்தில் செய்யப்படும் மதிப்பீட்டை சீனா ஆதரிக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியது.
சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பக்கச்சார்பற்ற, சுயாதீனமான மற்றும் விரிவான மதிப்பீடு செய்வதற்கான நடவடிக்கையை உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் விரைவாக தொடங்க வேண்டும் என்று வரைவுத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா போன்ற நாடுகளுடன் இந்தியா பல கட்டங்களில் ஆலோசனைகளில் ஈடுபட்டதாக வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா தெரிவித்தார்.
இந்தியாவிற்கான சீனத் தூதர் சன் வீடோங் தனது ட்வீட்டரில் “ அண்டை நாடுகளாகன சீனாவும் இந்தியாவும் ஒரே மாதிரியான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த கடினமான நேரத்தில் பொதுவான பணியை எதிர்கொள்கின்றன. கோவிட்- 19-க்கு எதிரான இந்த போரில் நாம் ஒன்றாக வெற்றிபெற வேண்டும், மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலத்துடன் ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று இராஜதந்திர உறவுகளின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த நாளில் நினைவு கூறுவோம்" என்று பதிவு செய்தார்.
முன்னதாக, சீன தூதரக செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் தனது ட்வீட்டரில் : “# சீனாவில் வுஹான் மாகனாத்தில் முதல் கோவிட் -19 வழக்குகள் பதிவானது. அதற்காக, வுஹானில் வைரஸ் தோன்றியது என்று அர்த்தமல்ல. வைரஸுக்கு எவ்வாறு பெயரிடுவது என்பது குறித்த குறிப்பிட்ட விதிகளை உலக சுகாதார அமைப்பு கொண்டுள்ளது. வைரஸை வுஹானுடன் இணைத்து சீனாவை களங்கப்படுத்துவது பொறுப்பற்றது” என்று பதிவு செய்தார்.
இதற்கிடையே, வரும் திங்களன்று, உலக சுகாதார சபையில் தைவானுக்கு பார்வையாளர் அந்தஸ்தை வழங்கலாமா? என்பதை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. இதற்கு, சீனா தனது எதிர்ப்பை பதிவு செய்து வந்தாலும், தைவானுக்கு பார்வையாளர் அந்தஸ்தை வழங்க அமெரிக்கா மற்ற நாடுகளின் ஆதரவை திரட்டி வருகிறது. இந்தியா, தனது முடிவை இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.