தென் ஆப்பிரிக்கா சுகாதாரத் துறையினர், இந்தியாவின் உயர் மருத்துவ நிபுணர்களிடம் ஒமிக்ரான் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம், இந்த புதிய கொரோனா மாறுபாடு அதிவேகமாக பரவக்கூடியது என்றும், பாதிக்கப்பட்ட நபருக்கு தீவிர சோர்வை அளிக்கக்கூடியது எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிரிக்காவுக்கு உதவும் இந்தியா</strong>
உலக சுகாதார அமைப்பின் சமீபத்தில் கூற்றுபடி, இந்த புதிய வேரியண்ட் அதிக ஆபத்து என மதிப்பிட்டுள்ளனர். ஆப்பிரிக்காவில் ஒமிக்ரானுடன் போராடும் நாடுகளுக்கு இந்தியா ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR),தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) ஆகியவற்றின் வல்லுநர்கள், தென்னாப்பிரிக்க அதிகாரிகளுடன் ஒமிக்ரான் பரவும் தன்மை மற்றும் நோய்த்தொற்றின் தீவிரத்தை குறித்து கலந்தாலோசித்ததாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன.
ஒமிக்ரான் எந்த உயிரிழப்பும் ஏற்படுத்தவில்லை
இந்தியாவில் கடும் பேரழிவை ஏற்படுத்திய டெல்டா வேரியண்ட் விட, ஒமிக்ரான் அதி வேகமாக பரவக்கூடியது. தற்போது வரை ஒமிக்ரான் எந்த உயிரிழப்பும் ஏற்படுத்தவில்லை என தென் ஆப்பிரிக்கா வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பாதிப்புகள்
ஒமிக்ரான் பாதிப்பு லேசான அளவிலே தென்படுகிறது. தீவிர சோர்வு மற்றும் தொண்டை எரிச்சல் ஆகியவை முக்கிய அறிகுறியாகும். மேலும், மற்ற வகைகளை போல் ஒமிக்ரானில் நோயாளிகள் உணர்வு, வாசனை மற்றும் சுவை இழப்போ, ஆக்ஸிஜன் குறைபாடோ எதிர்கொள்ளவில்லை. எனவே, ஒமிக்ரானை மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், தெளிவான அறிக்கை பின்னரே தெரியவரும் என்றும் வட்டாரங்கள் கூறுகின்றனர்.
வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுடன் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உட்பட அனைத்து விதமான உதவிகளை செய்யும். உயிர் காக்கும் மருந்துகள், சோதனை கருவிகள், கையுறைகள், பிபிஇ கருவிகள் மற்றும் வென்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ உபகரணங்களை வழங்க தயாராக உள்ளது.
மேலும், இந்திய நிறுவனங்கள் மரபணு கண்காணிப்பு மற்றும் வைரஸ் மாதிரியை ஆய்வு செய்யும் பணிகளுக்கு ஆப்பிரிக்காவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது” என குறிப்பிட்டிருந்தனர்.
இந்தியா இதுவரை 25 மில்லியனுக்கும் அதிகமான மேட்-இன்-இந்தியா தடுப்பூசிகளை ஆப்பிரிக்காவில் உள்ள 41 நாடுகளுக்கு வழங்கியுள்ளது, இதில் 16 நாடுகளுக்கு மானிய வடிவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டோஸ்களும், 33 நாடுகளுக்கு கோவாக்ஸ் வசதியின் கீழ் 16 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்களும் ஆகும்.
உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் ஒமிக்ரான் மேலும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதன் தன்மை, நோயெதிர்ப்பு தப்பிக்கும் திறன், நோயின் தீவிரம் மற்றும் சிகிச்சை முறைகளை பார்கையில், மீண்டும் ஒரு உலகளாவிய கொரோனா பாதிப்பு ஏற்படுத்தினால் அதன் பாதிப்பு கடுமையாக இருக்கும். அதிகப்படியான வழக்குகளால் மருத்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம். இருப்பினும், தற்போது வரை உலகில் ஒமிக்ரானால் உயிரிழப்பு ஏற்படவில்லை.
ஒமிக்ரான் தொற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. ஸ்காட்லாந்தில் ஆறு பேருக்கும், போர்ச்சுகலில் 13 பேருக்கும், கனடாவிலும் 2 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
ஒமிக்ரான் கொரோனா வகையால் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் 15 நாடுகளில் அதன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil